தேடுதல்

Vatican News
வாழ்வு அழகானது வாழ்வு அழகானது 

விதையாகும் கதைகள்:கடினமான பாதை, அழகான இலக்குக்கு!

ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும், வாழ்வைத் தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். அவரவர் மனம், அவரவர் பயணம், அவரவர் பாதை, அவரவர் வாழ்க்கை...

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்திருந்தார். அவர் மிகவும் சாதுவானவர், செல்வாக்குமிக்கவர். எந்த விடயத்தைப் பற்றிக் கேட்டாலும், அவர் ‘பளிச்’சென முக்காலமும் உணர்ந்து சொல்லக் கூடியவராக இருந்தார். அவர் எது சொன்னாலும்... அது, அப்படியே நடந்தது. இதைக் கண்ட கிராம மக்களுக்கு சற்றே பயம் வந்தது. இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், அந்தத் துறவி சொல்வதைப் பொய்யாக்கிவிட வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார்கள். குளிர்காலத்தில் ஒருநாள், அந்த இளைஞர்களில் ஒருவன், பெரிய குளிர் மேலாடை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, அதன் உள்ளே ஒரு புறாவை மறைத்து வைத்துக்கொண்டான். இருவரும் துறவியை சந்திக்கச் சென்றார்கள். அவர்கள் துறவி வாழ்ந்த குடிலை அடைந்தபோது, அவரைச் சுற்றி நிறைய மக்கள் வாக்கு கேட்க கூடியிருந்தார்கள். அந்த நேரத்தில் இந்த இளைஞர்கள், ‘ஐயா பெரியவரே, வணக்கம். இதோ இந்த கோட்டுக்குள் ஒரு புறாவை வைத்திருக்கிறோம். அது, உயிரோடு இருக்கிறதா... இல்லை, இறந்துவிட்டதா’ என்று கேட்டு எள்ளி நகையாடினார்கள். ‘உயிரோடு இருக்கிறது’என்று சொன்னால் புறாவை அப்படியே அமுக்கிக் கொன்றுவிடுவது எனவும், ‘செத்துவிட்டது’என்று சொன்னால், அதை உயிரோடு எடுத்துக்காட்டி, அவர் சொன்னதைப் பொய்யாக்கிவிடுவது எனவும் அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்கள். எந்தவிதத்திலும் துறவி தப்ப முடியாது என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் துறவியோ, ‘புறா சாகவும் இல்லை, உயிரோடும் இல்லை. அதன் வாழ்வும், சாவும் உங்கள் கையில்தான் இருக்கிறது”என்று மிகவும் சாதுர்யமாக பதில் சொன்னார். இந்தப் பதிலைக் கேட்ட இளைஞர்கள் இருவரும் திகைத்துப் போய், துறவியின் காலில் முகங்குப்புற விழுந்தனர். ஐயா, இப்போது, எங்களின் தீய எண்ணங்களும், அகந்தையும் எரிந்து சாம்பாலாகி விட்டன. எங்களை மன்னித்து ஆசிர்வதியுங்கள்’என்று மன்றாடினார்கள்.  

ஆம். எவரும் அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது. அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட முடியாது. அடுத்தவருடைய வாழ்வை வாழ முடியாது. யாருடைய வாழ்வையும் யாராலும் தீர்மானிக்க முடியாது. எனவே அவரவர் வாழ்வு அவரவர் கையில்தான் உள்ளது. கடினமான பாதைகள் எப்போதும் மகிழ்வான இலக்கையே  சென்றடையும். அவ்வாறு நினைத்து வாழ்வோர் வெற்றிமுடியை அணிந்துகொள்வர்.

09 January 2020, 14:19