தேடுதல்

Vatican News
மூன்று மனிதப் பொம்மைகள் மூன்று மனிதப் பொம்மைகள் 

விதையாகும் கதைகள்: நன்மைகளைப் பெற, நன்மைகளில் கவனம்

பொறாமையைத் தவிர்த்து எவ்வளவுக்கு நன்மைகளில் கவனம் செலுத்துகிறோமோ, அவ்வளவுக்கு நன்மைகள் திரும்பக் கிடைக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

சூஃபி மகான் ஒருவர் நடத்திய ஆசிரமத்திற்கு, மக்தூம் எனப்படும் ஓர் இளைஞர், புதிதாக வந்து சேர்ந்தார். மக்தூமின் அறிவும், பக்தியும், அடக்கமும் அந்த மகானைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், பொறாமைப்பட்ட ஆசிரம மூத்த மாணவர்கள், புதியவரை வீழ்த்த பல சூழ்ச்சிகள் செய்தனர். இதனைப் புரிந்துகொண்ட அந்த மகான், ஒரு திட்டம் வகுத்தார். ஒருநாள் அந்த மகான் எல்லா மாணவர்களையும் அழைத்து, உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், அதில் வெற்றி பெறுபவர் தன் வாரிசாக அறிவிக்கப்படுவார் என்று கூறினார். போட்டி நாளும் வந்தது. அன்று மாணவர்களுக்கு எதிரே, ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று மனிதப் பொம்மைகளை வைத்து, அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து சொல்லும்படி கூறினார் அவர். மூத்த மாணவர்கள் எல்லாரும் முந்திக்கொண்டு, அந்தப் பொம்மைகளைப் பல கோணங்களில் நீண்ட நேரம் ஆய்வு செய்து பார்த்தனர். ஆனால், யாருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. எனவே அவர்கள், குருவிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்குப்பின் பொம்மைகளிடம் வந்த புதிய மாணவர் மக்தூம், ஒரு மெல்லிய, நீண்ட கம்பியை, முதல் பொம்மையின் காதில் நுழைத்தார். கம்பி, பொம்மையின் மறு காது வழியே வெளிவந்தது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது வாய் வழியே கம்பி வெளிவந்தது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது கம்பி வயிற்றுக்குள் சென்றது. பின்னர், மக்தூம், தன் குருவிடம், ஐயா, மூன்றாவது பொம்மையே சிறந்தது என அறிவித்து, அதற்கு காரணத்தையும் விளக்கினார். முதல் பொம்மை எந்த அறிவுரையைக் கேட்டாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடும். இரண்டாவது பொம்மை, அறிவுரையைப் பிரச்சாரம் செய்யுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிக்காது. மூன்றாவது பொம்மையோ, அறிவுரையை உள்வாங்கி தன் வாழ்வை சீர்செய்துகொள்ளும். ஆகவே மூன்றாவது பொம்மையே சிறந்தது என்று சொன்னார், மக்தூம். பொறாமைப்பட்ட மூத்த மாணவர்கள் வாயடைத்து நின்றனர். (உதவி Shoofi Gnani Stories)

02 January 2020, 14:50