தேடுதல்

Vatican News
வேப்ப மரத்தில், விதைகளைத் தாங்கி நிற்கும் காய்கள் வேப்ப மரத்தில், விதைகளைத் தாங்கி நிற்கும் காய்கள்  (©RealityImages - stock.adobe.com)

விதையாகும் கதைகள் : ஓர் அறிமுகம்

கதைகள், நம் உள்ளங்களில் விதையாய் விழுந்து, நல்ல பலன் தரும் செடியாய், மரமாய் வளரும் என்ற நம்பிக்கையில், விதையாகும் கதைகள் பகுதியை இன்று துவங்குகிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மனித சமுதாயத்தில் கதைகளுக்குத் தனியொரு இடமுண்டு. குழந்தைப்பருவம் முதல் கதைகள் மீது நமக்குள்ள ஈர்ப்பை நாம் அறிவோம். நமக்கு ஏற்படும் அனைத்து அனுபவங்களும் கதைகளாய் பிறக்கின்றன. உலகின் பல முக்கிய மதங்களில் கதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. "கதை சொல்லும் கலை: விவிலியத்திலிருந்து" (Storytelling from the Bible) என்ற நூலை எழுதிய Janet Litherland என்பவர் கதைகளுக்குள்ள சக்தியைப் பற்றி இவ்விதம் கூறுகிறார்: "கதைகள் சக்திவாய்ந்தவை. அவை நம்மைக் கவர்ந்திழுக்கும், செயலாற்றத் தூண்டும்... நமக்கு மகிழ்வைத் தரும், கல்வி புகட்டும், சவால் விடும். வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள கதைகள் உதவி செய்யும். அவை நம் எண்ணங்களில் நீண்ட காலம் பதிந்துவிடும். எனவே, நீண்ட மறையுரைகளைக் காட்டிலும், ஒரு கதை, பெரும் சக்தி படைத்தது. ஓர் உண்மையை எடுத்துச் சொல்ல விருப்பமா? கதையாய்ச் சொல்லுங்கள். இயேசு இவ்விதம் சொன்னார். தன் கதைகளை அவர் உவமைகள் என்று கூறினார்."

புலர்ந்திருக்கும் 2020ம் ஆண்டில், நம் வானொலியின் முதல் நிமிடத்தில் கதைகளைப் பகிர்ந்துகொள்வோம். இவை, நம் உள்ளங்களில் விதையாய் விழுந்து, நல்ல பலன் தரும் செடியாய், மரமாய் வளரும் என்ற நம்பிக்கையில், விதையாகும் கதைகள் பகுதியை இன்று துவங்குகிறோம். பல்வேறு நாடுகள், பல்வேறு கலாச்சாரங்கள் கூறும் கதைகளை பகிர்ந்துகொள்ள முயல்வோம்.

வத்திக்கான் வானொலி குடும்பத்தினரும் இந்த முயற்சியில் பங்கேற்க அழைக்கிறோம். குறிப்பாக, உங்கள் உள்ளத்தில் நேர்மறையான தாக்கங்களை உருவாக்கிய கதைகளை எங்களுக்கு அனுப்பிவைத்தால், அவற்றை நாங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள முடியும். கதைகள் வழியே நல்ல விதைகளை அனைவரும் விதைப்போம், வாருங்கள்!

01 January 2020, 15:41