தேடுதல்

Vatican News
செல்வர் மற்றும் வறியோருக்கிடையே உருவாகியுள்ள பாகுபாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு செல்வர் மற்றும் வறியோருக்கிடையே உருவாகியுள்ள பாகுபாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு 

ஐ.நா.அவையின் உலக சமுதாய அறிக்கை 2020

1990க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில், உலகின் பொருளாதார இலாபங்கள் அனைத்தும், உலகின் மக்கள் தொகையில் மிகவும் செல்வந்தர்களான 1 விழுக்காட்டு மக்களை மட்டுமே சேர்ந்துள்ளது - ஐ.நா. அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், செல்வர் மற்றும் வறியோருக்கிடையே உருவாகியுள்ள பாகுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஐ.நா.அவை, சனவரி 21, இச்செவ்வாயன்று, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.அவையின் பொருளாதார மற்றும் சமுதாய செயல்பாடுகள் என்ற பிரிவு வெளியிட்டுள்ள The World Social Report 2020, அதாவது, உலக சமுதாய அறிக்கை 2020 என்ற அறிக்கையின்படி, சமுதாய ஏற்றத்தாழ்வுகள், வறுமைப்பட்ட நாடுகளையும், முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளையும் பாதிக்கின்றன என்று தெரிய வந்துள்ளது.

ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் நிலையற்ற பொருளாதாரத்தையும், வேலையில்லா நிலையையும் உருவாக்கியுள்ளதால், வளர்ச்சியடைந்த நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று, இவ்வறிக்கையின் துவக்கத்தில், ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

1990க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில், உலகின் பொருளாதார இலாபங்கள் அனைத்தும், உலகின் மக்கள் தொகையில் மிகவும் செல்வந்தர்களான 1 விழுக்காட்டு மக்களை மட்டுமே சேர்ந்துள்ளது என்றும், உலகின் 40 விழுக்காட்டு மக்கள் பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

தொழிநுட்பக் கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல், மற்றும் உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்தல் ஆகிய நான்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் நான்கு முக்கிய கூறுகளாக அமைந்துள்ளன என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உலகின் சஹாரா பகுதிகளில் வாழும் மக்களைக் காட்டிலும், வட அமெரிக்க நாடுகளில் வாழ்வோர், 16 மடங்கு அதிக வருவாய் பெறுகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, மனித வரலாற்றில் முதல் முறையாக, கிராமங்களில் வாழ்வோரின் எண்ணிக்கையைவிட, நகர்களில் வாழ்வோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என்ற புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. (UN)

22 January 2020, 15:17