தேடுதல்

Vatican News
ஐ.நா.வின் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் செனகல் நாட்டு இளையோர் ஐ.நா.வின் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் செனகல் நாட்டு இளையோர் 

ஐ.நா. அவையின் 75ம் ஆண்டு நிறைவு - உலகளாவிய உரையாடல்

ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சிறப்பிக்கப்படுவதையொட்டி, UN75 என்ற பெயரில், எதிர்காலத்தைப் பற்றிய உலகளாவிய உரையாடல் முயற்சியொன்றை துவங்கியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் அவை, சனவரி 1, இப்புதனன்று, UN75 என்ற பெயரில், எதிர்காலத்தைப் பற்றிய உலகளாவிய உரையாடல் முயற்சியொன்றை துவங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சிறப்பிக்கப்படுவதையொட்டி, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

இவ்வுலகம் சந்திக்கும் சவால்களுக்கு தகுந்த பதிலிறுப்புக்கள் அடங்கிய ஒரு தொகுப்பு, உலகின் 120 நாடுகளில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த ஒரு நாடும் தனித்து தீர்வுகள் காணமுடியாது என்று கூறிய, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், அனைவரிடமிருந்தும் திரட்டப்படும் கருத்துக்கள், இவ்வாண்டு செப்டம்பர் 21ம் தேதி, ஐ.நா. அவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஐ.நா.வின் செயல்பாடுகளில் இதுவரை ஈடுபடாமல் விலகியிருக்கும் இளையோர், UN75 உரையாடலில் தனிப்பட்ட, முக்கியமான பங்கு வகிப்பர் என்று, இத்திட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் கூறியுள்ளனர்.

இந்த உரையாடலின் ஒரு முன்னோட்டமாக, சனவரி 6ம் தேதி, 38 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் ஓர் உரையாடலை, ஐ.நா. அவையும், Vox Media என்ற ஊடக நிறுவனமும் இணைந்து வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி 50 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐ.நா. அவை, 2020ம் ஆண்டு, தன் 75 ஆண்டு பணிகளை நிறைவு செய்கிறது. (UN)

02 January 2020, 15:05