தேடுதல்

Vatican News
சொந்த நாட்டில் வேலையின்மையால் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைய முயலும் ஹொண்டூராஸ் இளையோர் சொந்த நாட்டில் வேலையின்மையால் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைய முயலும் ஹொண்டூராஸ் இளையோர்  (AFP or licensors)

ஏறத்தாழ ஐம்பது கோடிப் பேருக்கு தரமான வேலை இல்லை

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் நீடித்த நிலைத்த வளர்ச்சித்திட்ட இலக்கில், வறுமையை ஒழிப்பது முக்கியமானது, ஆனால், வளரும் நாடுகளில் 2020-21ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 3.20 டாலருக்குக் குறைவாக ஊதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - ILO

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில், ஏறத்தாழ ஐம்பது கோடிப் பேர், தாங்கள் செய்யும் வேலைக்குத் தரமான ஊதியம் பெறாமல் உள்ளனர் என்றும், இவ்வாண்டில் வேலைவாய்ப்பின்மை ஏறத்தாழ 25 இலட்சமாக உயரும் என்றும், ஐ.நா.வின் உலக தொழில் நிறுவனம் எச்சரித்துள்ளது.

ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம், சனவரி 20, இத்திங்களன்று வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில், உலக அளவில் வேலையின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக அதேநிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளது.

உலகில் வேலையின்று உள்ளவர்கள், ஏறத்தாழ 18 கோடியே 80 இலட்சம் என்றும், மேலும், 16 கோடியே 50 இலட்சம் பேர், வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காமல் உள்ளனர் என்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர் Guy Ryder அவர்கள் கூறியுள்ளார்.

இலட்சக்கணக்கான சாதாரண மக்கள், வேலை வழியாக, தங்கள் வாழ்வை உயர்த்துவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்றும், வேலை தொடர்பான சமத்துவமின்மைகள் மற்றும், ஒதுக்கப்படல், தரமான வேலைகளைத் தேட தடைகளாக உள்ளன என்றும், Guy Ryder அவர்கள் கூறியுள்ளார்.

15க்கும் 24 வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ 26 கோடியே 70 இலட்சம் இளைஞர்கள், வேலைவாய்ப்பின்மை, கல்வி, தொழில்பயிற்சி போன்றவையின்றி உள்ளனர் என்றும், ILO நிறுவனம் தெரிவித்துள்ளது. (UN)

21 January 2020, 14:50