தேடுதல்

Vatican News
2019ம் ஆண்டு, 2வது மிக வெப்பமான ஆண்டு 2019ம் ஆண்டு, 2வது மிக வெப்பமான ஆண்டு 

2019ம் ஆண்டு, 2வது மிக வெப்பமான ஆண்டாக இருந்தது

உலக வெப்பநிலை பதிவாகத் துவங்கிய காலத்திலிருந்து, 2019ம் ஆண்டு, இரண்டாவது மிக வெப்பமான ஆண்டாக இருந்தது - ஐ.நா. அவையின், உலக வானிலை நிறுவனம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக வெப்பநிலை பதிவாகத் துவங்கிய காலத்திலிருந்து, 2019ம் ஆண்டு, இரண்டாவது மிக வெப்பமான ஆண்டாக இருந்ததென்று, ஐ.நா, அவையின், உலக வானிலை நிறுவனம் (WMO - World Meteorological Organization), சனவரி 15, இப்புதனன்று, உறுதி செய்துள்ளது.

உலகம், தொழில் மயமாவதற்கு முன் நிலவிய உலக வெப்பநிலையைவிட, 1.1 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகியிருந்தது என்று, WMOவின் பொதுச் செயலர் Petteri Taalas அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதே அளவில் நம் வெப்பநிலை கூடிவந்தால், 21ம் நூற்றாண்டு, நிறைவுக்கு வருவதற்குள் உலகின் வெப்பநிலை, 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிடும் என்று, Taalas அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

தொழில் மயமாவதற்கு முந்தைய சகாப்தம் என்று கணக்கிடப்படும் 1850க்கும் 1900த்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவிய உலக வெப்பநிலையை விட, 2019ம் ஆண்டு, உலகெங்கும், சராசரியாக, 1.1°C கூடுதல் வெப்பம் நிலவியது என்று, WMO நிறுவனம் கூறியுள்ளது.

2016ம் ஆண்டு, உலகில் நிலவிய, எல் நீனோ (El Niño)வின் தாக்கத்தினால், அவ்வாண்டு, மிக உயர்ந்த வெப்பநிலை உருவாகியது என்றும், அதற்கு அடுத்தபடியாக, 2019ம் ஆண்டு, அதிக வெப்பநிலை நிலவியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிக வறட்சியான மற்றும் மிக வெப்பமான ஆண்டாக, 2019ம் ஆண்டு பதிவாகியுள்ளது என்று கூறிய WMO செயலர் Taalas அவர்கள், 2020ம் ஆண்டிலும், பசுமை இல்ல வாயுக்களை அடைத்துவிடும் வெப்ப நிலை உருவாகும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார்.(UN)

16 January 2020, 14:35