தேடுதல்

Vatican News
காலக் கடிகாரங்கள் காலக் கடிகாரங்கள் 

வாரம் ஓர் அலசல்: எதிர்த்து நில், வெற்றி நிச்சயம்

அப்துல் கலாம் - நம் பிறப்பு ஒரு நிகழ்வாக இருக்கலாம். ஆனால், நம் இறப்பு ஒரு வரலாறாக அமைய வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு சமயம், பில்கேட்ஸ், அம்பானி போன்ற ஒரு கோடீஸ்வர முதலாளி, தன் நம்பிக்கைக்குரிய பணியாளைப் பார்த்துச் சொன்னார்.. ‘ஒவ்வொரு நாளும் உனக்கு ஒரு இலட்சம் ரூபாய் செலவு செய்யத் தருவேன். ஆனால், நான் தரும் ரூபாய் அனைத்தையும் அன்றன்றே செலவு செய்துவிட வேண்டும். சேமித்து வைக்க உனக்கு அதிகாரமில்லை என்று. பணியாளும், தன் முதலாளியின் அன்புக்கு அடிபணிந்தார். உடனடியாக, தனக்கும், குடும்பத்திற்கும் எதெது தேவையோ அவற்றை எல்லாம் வாங்கினார். நண்பர்களுக்கும், ஏழைகளுக்கும் வாரி வழங்கினார். கிடைக்கும் தொகையில் ஒரு ரூபாய்கூட மீதி வைக்கக் கூடாது என்பதால், பணத்தை அன்றன்றே பல அறக்கட்டளைகளுக்கும், ஆலயங்களுக்கும் தானமாக அளித்தார். அந்த பில்கேட்ஸ் யார்? அவரிடம் வேலை செய்த அந்த பேறுபெற்ற பணியாள் யார்? அவர் வேறு யாருமில்லை. நம்மை உருவாக்கி, உருக்கொடுத்து உடன் இருந்து உதவிவரும் ஆண்டவனே அந்த முதலாளி. நாம் ஒவ்வொரும்தான் அந்த பணியாள். ஆம்! ஆண்டவன், நம் எல்லாருக்குமே ஒவ்வொரு நாளும் 86,400 பொன்னான விநாடிகளை வழங்கி வருகிறார். அவற்றை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதற்கு, 2019ம் ஆண்டின் இந்த இறுதி நாள்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

அக்பர், பீர்பால், 5 அறிவிலிகள்

ஒரு சமயம், பேரரசர் அக்பர், தனது அமைச்சர் பீர்பாலிடம், ‘ஐந்து அறிவிலிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஓர் ஆசை எழுகின்றது, நீர் நாட்டிற்குள் சென்று அவர்களைத் தேடி அழைத்து வாரும் என்று ஆணையிட்டார். அரச ஆணைக்கு அடிபணிந்து ஓரிரு நாள்கள் தேடி அலைந்தார் பீர்பால். கடைசியில் மூன்று முட்டாள்களே அவர் கண்ணில் தென்பட்டனர். அவர்களை அழைத்து வந்து அக்பர்முன் நிறுத்தினார் பீர்பால். அக்பரும், இந்த மூவரும் முட்டாள்கள் என எண்பித்துக் காட்டுங்கள் என்று பீர்பாலிடம் கேட்டார். அமைச்சர் பீர்பால், அரசே, இவர்களில் ஒருவன் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது தன் தலைமேல் ஒரு மூட்டையைச் சுமந்தபடி காட்சி அளித்தான். ‘சுமையைக் குதிரை மீதே வைக்கலாமே! ஏன் அப்படி சுமந்துகொண்டு கஷ்டப்படுகிறாய்? என்று கேட்டேன். அவன் சொன்னான், ‘உங்களுக்கு அறிவிருக்கிறதா? என்னைச் சுமக்கவே குதிரை கஷ்டப்படுகிறது. இந்தச் சுமையையும் அதன்மீது வைத்தால் என்ன ஆகும்?’ என்றான். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் அக்பர். இரண்டாவது ஆள், தன் பணத்தை ஒரு வீதியில் தவறவிட்டு விட்டு, வேறொரு தெருவில் வந்து தேடிக் கொண்டிருந்தான். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவனிடம் கேட்டேன். ‘பணத்தை அங்கு தேட முடியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. இந்த வீதியில்தான் விளக்குகள் எரிகின்றன. வெளிச்சம் இருக்கும் இடத்தில்தானே தேட முடியும் என்றான். ‘இப்படியும் ஒரு அறிவிலியா? சரி, மூன்றாமவன் என்ன செய்தான், சொல்? என்றார் அக்பர். அரசே, அந்த இடத்தில் நின்ற மூன்றாம் முட்டாள் பெரிதாகக் குரல் எழுப்பிவிட்டு அந்த இடத்திலிருந்து ஓடினான். ‘என்ன செய்கிறாய்?’ என்றேன். எவ்வளவு தூரத்திற்கு என் குரல் கேட்கும் என்று அறிந்துகொள்ள ஓடினேன். தடுத்து விட்டீர்களே?’ என்றான். ‘நாட்டில் இப்படியும் முட்டாள்கள் இருக்கின்றனரே’ என்று வியந்தார் பேரரசர் அக்பர். சரி, பீர்பால், ஐவருக்குப் பதில் மூவர்தானே வந்துள்ளனர். இன்னும் இருவர் எங்கே? என்று கேட்டார். பீர்பால் தன்னைச் சுட்டிக்காட்டி ‘அமைச்சராகிய நான் ஆற்றவேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்க, பயனற்ற இந்த வேலையில் இத்தனை நாள்களைச் செலவழித்துவிட்டேன். எனவே நான்காவது அறிவிலி நான்தான். ஐந்தாவது அறிவிலி யார் என்று சொல்ல எனக்கு துணிச்சல் இல்லை. பொன் போன்ற காலத்தை, விலைமதிப்பில்லா நேரத்தை வீணாகச் செலவழிக்க ஆணையிட்டவரே அந்த ஐந்தாவது அறிவிலி என்று சொன்னார் பீர்பால்.

அதிவேக உலகம்

காலம் பொன்னானது என்று அடிக்கடிச் சொல்கிறோம். பாடுகிறோம். ஆனால் நேர மேலாண்மையை தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துவது நம்மில் எத்தனை பேர்? இக்கால கணனி மனிதரின் வாழ்வு பரபரப்பாகிவிட்டது. எங்கும் எதிலும் விரைவாகச் செல்லவே முயற்சிக்கின்றனர். அருகில் இருப்பவர் யார், எதிரில் வருபவர் யார் என்ற சிந்தனையின்றி கருவிகளோடு மனிதர் ஒன்றித்து விடுகின்றனர். அதனால் உறவுகளும் தொலைந்துபோய், தனிமரமாய் தனிமையில் வாடும் அவலமும் நிலவுகின்றது. சீனா, ஜப்பான், இத்தாலி, இஸ்பெயின், சவுதி அரேபியா, ஜெர்மனி, தென் கொரியா, ஹாலந்து போன்ற பத்து நாடுகளில் அதிவேக இரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சீனாவில் மணிக்கு 431 கிலோ மீட்டர் வேகத்தில் Shanghai Maglev இரயில் பறந்துகொண்டிருக்கின்றது. இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், மனந்தளர்ந்து சோர்ந்து, நேரத்தை ‘சும்மா’ கழிப்பவர்களையும் கண்டு பரிதாபப்பட வேண்டியிருக்கிறது.

2019ம் ஆண்டின் நாள்காட்டி விரைவில் கிழிக்கப்படவிருக்கிறது. நாள்கள் நகர, நகர, நம் உள்ளங்களில் ஏதேதோ சிந்தனைகள்! இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிலாமே, இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாமே என்ற காலம் கடந்த சுய அனுதாபங்கள். வாழ்க்கை என்பது நாம் வாழும்வரை அல்ல, மற்றவர் மனதில் வாழும்வரைதான். ஆயினும், இந்த வாழ்க்கை நாம் நினைப்பதுபோல் இருக்காது. அதேநேரம், நாம் நினைப்பதுபோல் மாற்ற முடியும். அது முயற்சித்தால் மட்டுமே.

பிரதமர் நேருவும், நேர மேலாண்மையும்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நேரம் போதவில்லை’ என்று அடிக்கடி சொல்வாராம். ஒருநாள் சிலர் அவரிடம், இப்படியே சொல்கிறீர்களே, அப்படியிருக்க, உங்கள் பேச்சில், உங்கள் நூல்களில் அரிய செய்திகள் மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளனவே, இத்தனை நூல்கள் வாசிப்பதற்கு மட்டும் எங்கிருந்து நேரம் கிடைத்தது?’ என்று கேட்டனராம். அதற்கு நேரு அவர்கள், திருடுகிறேன் என்று சொன்னாராம். புரியவில்லையா? ‘என் உதவியாளர் நான் உறங்குவதற்கு ஐந்து மணிநேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் திருடி, படிப்பதற்கு என்று எடுத்துக்கொள்கிறேன்’ என்று பதில் சொன்னாராம். நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், ‘நம் பிறப்பு ஒரு நிகழ்வாக இருக்கலாம். ஆனால், நம் இறப்பு ஒரு வரலாறாக அமைய வேண்டும் என்று அடிக்கடி சொன்னார். அதன்படியே, வரலாறும் படைத்தார். வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு, அதை நழுவ விடாதீர்கள், அது ஒரு கடமை, நிறைவேற்றுங்கள். அது ஓர் இலட்சியம், சாதித்துக் காட்டுங்கள். அது ஒரு சோகம், தாங்கிக் கொள்ளுங்கள். அது ஒரு போராட்டம், வென்று காட்டுங்கள். அது ஒரு பயணம், நடத்தி முடியுங்கள் என்று அறிவுரை கூறியவரும், நம் கலாம் அவர்கள்தான்.

டாக்டர் டி.வி.அசோகன்

சென்னை மனநல மருத்துவர், டாக்டர் டி.வி.அசோகன் அவர்கள், தினமலர் இதழில் இவ்வாறு பதிவு செய்திருந்தார். கடந்து சென்ற வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, சில சமயங்களில் முக்கிய செயல்களை மேற்கொள்ளாததற்கு, நேரமின்மை என்பதையே காரணமாக்குகிறோம். அதற்கு நேர மேலாண்மை பற்றி சரியான புரிதல் இல்லாததுதான், உண்மையான காரணமாக இருக்கும். கடந்த நேரமும், கரையை நனைத்த அலையும் திரும்பி வராது. ஓர் ஆண்டின் முக்கியத்துவம், தேர்ச்சியடையாத மாணவனுக்குப் புரியும். ஒரு மாதத்தின் முக்கியத்துவம், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தெரியும். ஒரு வாரத்தின் முக்கியத்துவம், வார இதழ் ஆசிரியர் அறிவார். ஒரு நாளின் முக்கியத்துவம், வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் தம்பதியர் அறிவர். ஒரு நிமிடத்தின் முக்கியத்துவம், பேருந்தை தவறவிட்டவர் உணர்வார். ஒரு வினாடியின் முக்கியத்துவம், விபத்தில் தப்பியவர் சொல்வார். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தின் அருமை, ஒலிம்பிக்கில், நூறு மீட்டர் பந்தயத்தில் இரண்டாவதாக வந்தவருக்குப் புரியும். வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும், நேர மேலாண்மையை முதன்மையானக் காரணமாகக் கூறுகின்றனர்.

நேர மேலாண்மை

நேர மேலாண்மை என்பது, சரியான நேரத்தில், சரியான வேலையைச் செய்வதாகும். எனவே நேர மேலாண்மைக்கு, திட்டமிடுதல் முக்கியம். நேரம், விரும்புகின்றவர்களுக்கு நித்தியமாக இருக்கிறது. முக்கியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியம். நேரத்தை உறிஞ்சும் முக்கியமில்லாத, தேவையற்ற காரியங்களைத் தவிர்த்துவிடுங்கள். காற்று தக்கவாறு இல்லை என்று காத்துக்கொண்டே இருப்போர், விதை விதைப்பதில்லை. வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை’ (ச.உ.11:4) வேலைகளைத் தள்ளிப்போடப் போட நேரம் வீணாகும், வேலையும் குவிந்துகொண்டே போகும். எனவே, நேரத்தை வீணடிக்காதீர்கள். காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட, மன அமைதி (ஓய்வு) ஒரு கையளவு இருப்பதே மேல்” (ச.உ.4:6,) என்பது போல, வேலையே கதியாக இருப்பவர்கள் அவர்களுடைய கடின உழைப்பின் பலன்களை ருசிப்பதே இல்லை. எனவே, கடினமாக உழைப்பதிலும் அதன் பலனை அனுபவிப்பதிலும் சமநிலையோடு இருங்கள். வாழ்க்கைக்கு எது நல்லது, எது முக்கியமானது, எது பயனுள்ளது என்பதைச் சீர்தூக்கி பார்க்க நன்நெறிகள் உதவும். எனவே, நல்ல நெறிகளைக் கடைப்பிடியுங்கள்.

நம் உடலில் உள்ள திசுக்கள், ஒவ்வொரு கணமும் தேய்கின்றன, வளர்கின்றன. இப்படி ஒவ்வொரு நாளும் நிகழும் மாற்றத்தினால் ஏற்படும் திசுக்களின் அழிவைத் தடுக்க முடியாது. அப்படி அழிந்த திசுக்களை நாம் மீண்டும் பெற முடியாது. அதேபோல் இயற்கையில் நிகழும் மாற்றத்தினால் ஏற்படும் அழிவுகளையும் நாம் மீண்டும் திரும்பப் பெற முடியாது. இவையெல்லாம் நம் சக்திக்கு அப்பாற்பட்டவை. அதேபோல் “காலம்” என்ற கடிகாரச் சுழற்சியையும் நம்மால் நிறுத்த முடியாது. எனவே, வாழ்வில், “தோற்றால் புலம்பாமல், போராடுங்கள். யாரும் கிண்டலடித்தால் கலங்காமல், மன்னித்துவிடுங்கள். தள்ளிவிட்டால் தளராமல். துள்ளி எழுந்து நடங்கள். நஷ்டப்பட்டால் நடுங்காமல் நிதானமாகச் சிந்தியுங்கள். ஏமாந்துவிட்டால் ஏங்காமல், எதிர்த்து நில்லுங்கள். வெற்றி நிச்சயம்” (சத்குரு). வினாடி நேரத்தையும் வீணாக்காமல், மணித்துளி ஒவ்வொன்றையும் சிப்பிக்குள் விழும் மழைத்துளி போல மாற்றுபவர்களின் கழுத்தில்தான், காலம், தன் முத்துமாலையைச் சூட்டுகிறது என்ற ஆன்றோர் கூற்றை நினைவில் இருத்துவோம்.

16 December 2019, 14:55