தேடுதல்

Vatican News
ஆவடி, பருத்திப்பட்டு ஏரி ஆவடி, பருத்திப்பட்டு ஏரி 

பூமியில் புதுமை: ஏரித் தீவில் உருவாகும் செயற்கைக் காடு

பழங்கால தமிழர்கள் மகிழம் மரப் பட்டைகளைப் பொடியாக்கி, பற்பொடியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இவை மணம் மிக்க சுற்றுச்சூழலை உருவாக்கும் மற்றும், புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டவை

மேரி தெரேசா: வத்திக்கான்

காடுகள் அழிக்கப்பட்டுவரும் இக்காலச் சூழலில், பல்வேறு சமுதாய ஆர்வலர்கள்,  செயற்கை காடுகளை உருவாக்கி வருகின்றனர். தமிழகத்தின்  திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, பருத்திப்பட்டு ஏரியின் நடுவே, 44 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு செயற்கைத் தீவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. 53.28 ஏக்கர் நீர்ப்பிடிப்பு உள்ள அந்த ஏரியில், 28 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இத்தீவுகளில் 'நனை' என்ற தன்னார்வலர் அமைப்பினர், வார விடுமுறை நாளில் இணைந்து, மூன்று வாரங்களுக்கு மேலாக, 'மியோவாக்கி' எனப்படும், ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும், அடர்வன நடவு முறையில், மலை வேம்பு, சொர்க்கம், குதிரை புடுக்கன், வேங்கை, மஞ்சாடி, புங்கை, செம்மரம் உள்ளிட்ட உடல்நலத்திற்கு உதவும் பலவகையான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதுவரை, அவர்கள், 670க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இப்பணியில், மரக்கன்றுகளுக்கு தேவையான ஊன்றுகோல் வெட்டுவது, குழி தோண்டுவது, பணியாளர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும், முகம் அறியப்படாத பலர் உதவி வருகின்றனர். சென்னையில் மரம் நடுவதற்கு எந்தப் பகுதியில் இடம் இருந்தால் போதும். நாங்கள் சமுதாய வலைதளங்கள் வழியாக இணைந்து, அங்கு மரக்கன்றுகள் நட்டு வளர்த்துத் தருவோம். ஐந்து பேருடன்தான் ஆரம்பித்தோம். தற்போது பலர், எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர் என்று இந்த அமைப்பினர் கூறுகின்றனர். இந்த ஏரித் தீவில் மட்டும், 1,200 மரக் கன்றுகள் நடுவதற்கான இடவசதி உள்ளது. பறவைகள் தங்கி முட்டையிட்டுக் செல்வதற்கு ஏற்ப, செயற்கைக் காடாக இந்த இடம் விரைவில் மாறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது (தமிழ் இணையதள நாளிதழ்கள்)

19 December 2019, 15:06