தேடுதல்

Vatican News
மியான்மார் Yeywa நீர்தேக்கம் மியான்மார் Yeywa நீர்தேக்கம் 

பூமியில் புதுமை: மியான்மாரின் இயற்கை வளம்

மிசோராம்-மணிப்பூர்-கச்சின் பருவமழைக் காடுகள், ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இக்காடுகளில், 580 வகையான பறவையினங்கள் வாழ்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மார், பங்களாதேஷ், இந்தியா, சீனா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்நாடு, இரத்தினக்கற்கள், எண்ணெய், எரிவாயு போன்ற நிறைய கனிம வளங்களைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் பெரும்பகுதி, காடுகளால் நிறைந்து, வெப்பமண்டல காலநிலையையும் கொண்டிருக்கின்றது. மிசோராம்-மணிப்பூர்-கச்சின் பருவமழைக் காடுகள், இந்தியா, பங்களாதேஷ் மற்றும், மியான்மார் நாடுகளை இணைக்கும் மலைப்பகுதி எல்லைகளின் குன்றுகளில் அமைந்துள்ளன. ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இக்காடுகள், உலக அளவில், பல்லுயிரினங்கள் வாழ்கின்ற பகுதிகளில் ஒன்றாக, WWF எனப்படும் உலக வன அமைப்பு அறிவித்துள்ளது. இங்கு 580 வகையான பறவையினங்கள் வாழ்கின்றன. மியான்மாரில், ஏறத்தாழ இருநூறு பெரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றில், 39 ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. 2002ம் ஆண்டில், மணிக்கு 6,614 கிகாவாட் மின்சாரம் தாயரித்தது மியான்மார். இந்நாட்டின் ஏறத்தாழ 63 நீர்மின்சக்தி திட்டங்களில், குறைந்தது 45ல், சீன பன்னாட்டு-தேசிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கச்சின் மாநிலத்தில் பாய்கின்ற Irrawaddy பெரிய ஆற்றில், Mali மற்றும், N’mai ஆறுகள் சேரும் இடத்தில், சீனாவின் உதவியுடன், 2009ம் ஆண்டில் துவங்கப்பட்ட Myitsone பெரிய நீர்த்தேக்கம் மற்றும், நீர்மின்சக்தி நிலையக் கட்டுமான பணிகள், மியான்மார் மக்களின் கடும் எதிர்ப்பால் 2011ம் ஆண்டில் நிறுத்தப்பட்டன. சீன அரசின் மின்சக்தி முதலீட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 6,400 மெகாவாட் திட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கம், மியான்மாரின் கலாச்சாரத் தொட்டிலாக அமைந்துள்ள Irrawaddy ஆற்றைத் தடுப்பதற்குக் கட்டப்படும் முதல் நீர்த்தேக்கமாக இருக்கும். Myitstone நீர்த்தேக்கம் கட்டப்பட்டால், அப்பகுதியிலுள்ள அறுபது கிராமங்களின் 15 ஆயிரம் மக்கள் கட்டாயமாகப் புலம்பெயரவேண்டியிருக்கும். இவ்வாறு மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், இத்திட்டத்திற்கு, தனது கடுமையான எதிர்ப்பை பலமுறை வெளியிட்டுள்ளார். ஆயினும், சீனா, இதைக் கட்டுவதற்கு முயற்சித்து வருகின்றது எனச் செய்திகள் கூறுகின்றன. இத்திட்டம் நிறைவேறினால், இது உலகில் ஐந்தாவது பெரிய நீர்மின்சக்தி நிலையமாக இருக்கும்.

04 December 2019, 11:58