தேடுதல்

Vatican News
துணிப் பைகளால் குடில்கள் தயாரித்துள்ள ஆசிரியர் சுந்தர ராசு துணிப் பைகளால் குடில்கள் தயாரித்துள்ள ஆசிரியர் சுந்தர ராசு  

பூமியில் புதுமை : துணிப் பைகளால் கிறிஸ்மஸ் குடில்கள்

ஆசிரியர் சுந்தர ராசு அவர்கள், திருமணம், மஞ்சள்நீராட்டு, புதுமனைபுகு விழா, காதணி விழா, வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் சேகரித்த தாம்பூல பைகளைக் கொண்டு, துணி பைகளில் குடில்களை அமைத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்மஸ் பெருவிழா நாள் நெருங்க நெருங்க, மக்கள் கூட்டம் கடைவீதிகளில். அலைமோதுகிறது. போக்குவரத்து நெருசல்களும் அதிகரித்துள்ளன கிறிஸ்தவர்கள் பல்வேறு ஆன்மீக பொருளிய மற்றும், உடல்சார்ந்த தயாரிப்புக்களை முடுக்கிவிட்டுள்ளனர். புதுச்சேரி, அரியாங்குப்பம் சாமிநாத நாயக்கர் வீதியில் வாழ்ந்துவரும் சுந்தர ராசு என்பவர், 700 துணிப் பைகளைக் கொண்டு கிறிஸ்மஸ் குடில் செய்து அசத்தியுள்ளார். நோனாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், நெகிழி பைகளைத் தவிர்த்து, துணிப் பைகளை பயன்படுத்த வலியுறுத்தி, இவ்வாறு குடில் அமைத்து மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார். மேலும், 1 செ.மீ கொண்ட கிறிஸ்மஸ் குடில், காய்கறியினால் செய்யப்பட்ட குடில், நெகிழி பாட்டில்கள், தேங்காய் நார், 27 வகையான தானியங்கள், 750 நூல்கள் கொண்ட குடில் போன்ற கிறிஸ்மஸ் குடில்களையும், ஆசிரியர் சுந்தர ராசு அவர்கள் அமைத்துள்ளார். இந்த குடில்கள் செய்வதற்காக, திருமணம், மஞ்சள்நீராட்டு, புதுமனைபுகு விழா, காதணி விழா, வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் தாம்பூல பைகளைச் சேகரித்து குடிலை அமைத்துள்ளார். இந்த பைகளைக் கொண்டு கிறிஸ்மஸ் மரம், நிலப்பகுதி, மலை, மாட்டுத் தொழுவம், செடி, விண்மீன்கள், வானதூதர்கள், குடிசைப்பகுதி போன்றவற்றை வடிவமைத்துள்ளார். அதுமட்டுமல்லால் இவர், கிறிஸ்மஸ் தாத்தாவின் முழு உருவத்தையும் துணி பையாலேயே வடிவமைத்துள்ளது தனி சிறப்பாகும். புதுச்சேரியில் சுற்றுபுறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நெகிழிப் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ள சூழலில், மக்களிடம் துணிப் பை குறித்த விழிப்புணர்வை இதன் வழியாக ஆசிரியர் சுந்தராசு அவர்கள் ஏற்படுத்தியுள்ளார். இவரது படைப்புகள் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன. (tamil.oneindia.com)

23 December 2019, 15:12