தேடுதல்

Vatican News
அலையாத்திக் காடுகள் அலையாத்திக் காடுகள் 

பூமியில் புதுமை : சுனாமியிலிருந்து காத்த அலையாத்திக் காடுகள்

அலையாத்தி மரங்கள், முத்துப்பேட்டையில் தொடங்கி அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரையைத் தாண்டியும் வளர்ந்து நிற்கின்றன. இந்தப் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் கடற்கரையையொட்டி இருக்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

2019ம் ஆங்கில ஆண்டு, சூழலியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாக விடைபெறுகிறது. உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் பருவமழைக் காடுகளில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பற்றியெறிந்த தீயின் கடும் விளைவுகள், உலகின் ஒட்டுமொத்த சூழலியலை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மும்பையிலுள்ள ஆரே காட்டுப் பகுதி, ‘மும்பையின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது. ஆரேயில் உள்ள மரங்கள், புல்வெளிகள், புதர்கள், மற்றும், சதுப்புநிலங்கள் அடங்கிய சூழல் தொகுதி, சிறுத்தை, வலசைப் பறவைகள், பாம்பு, தேள், சிலந்தி, வண்ணத்துப்பூச்சி உள்பட பல்வேறு தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழ்விடமாகச் செழித்திருந்தது. இந்த இடத்தில், மும்பை மெட்ரோ இரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்துக்காக 2,800 மரங்கள் வெட்டப்பட்டன.

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சின்னத் தடாகம் கிராமம், உயிரினப் பன்மை வளம் மிகுந்தும், யானை வழித்தடமாகவும் விளங்குகிறது. இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் ஆகியவற்றை உருவாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசின் அனுமதியின்றி இங்குச் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளிலிருந்து வெளியேறும் புகை, மற்றும், நுண்ணிய கார்பன் துகள்கள், மனிதரின் உடல்நலத்தை மட்டுமல்ல, உணவுக்காகவும் நீருக்காகவும் இடம்பெயரும் யானைகளையும், கடுமையாய்ப் பாதிக்கின்றன.

அதேநேரம், டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தில் சுனாமி நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டபோது, தஞ்சாவூர் மாவட்ட கடற்கரையோர மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள், ‘அலையாத்திக் காடுகள்தான் எங்களை சுனாமியிலிருந்து காத்த கடவுள்’ என நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர். சதுப்புநில காடுகள் என்று அழைக்கப்படும் இவற்றிலுள்ள மரங்கள், அலைகளின் வேகத்தைக் குறைப்பதால், இவை  அலையாத்திக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆயினும், கஜா புயலில் வேகமாகச் சுழற்றி அடித்த காற்றைத் தாங்க முடியாத அலையாத்தி மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. சுனாமி பேரழிவிலிருந்து தஞ்சை மாவட்டத்தை காத்த அலையாத்தி மரங்களைக் காக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். இந்தக் காடுகள், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தொடங்கி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வரை, கடற்கரைகளில் உள்ளன. (விகடன், இந்து தமிழ் திசை)

30 December 2019, 15:14