தேடுதல்

Vatican News
இந்தியாவில் வயலில் உழைக்கும் விவசாயிகள் இந்தியாவில் வயலில் உழைக்கும் விவசாயிகள் 

பூமியில் புதுமை : உழவன் கணக்குப் பார்த்தால், உயிர்கள் மிஞ்சாது

நமது முன்னோர்கள் வாழ்க்கையில் விவசாயம் என்பது ஒரு வாழ்வியலாக இருந்தது, ஆனால் தற்போது அது வாழ்வாதாரமாக இருந்தாலும், வியாபாரம் எனும் கண்ணோட்டத்தில், பெரிய நிறுவனங்களின் கைகளில் தள்ளப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தையும் விவசாயத்தின் அடிப்படையில் பெறவேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி 'சேற்றில் கால்வைத்தால் தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்'. 'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு' என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார்.

ஆனால், இன்று, விவசாயத்தின் நிலை என்ன?

விவசாயத்தோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். விவசாய பெருமக்கள் நிலத்தோடு மல்லுக்கட்டினர். 'எரு (இயற்கை உரம்) செஞ்சது மாதிரி, இனத்தான்கூட செய்ய மாட்டான்' என்று அதன்மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். அன்று இஷ்டப்பட்டு விவசாயம் செய்தனர். வளமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். இன்று கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர். நமது முன்னோர்களின் வாழ்க்கையில், விவசாயம் என்பது ஒரு வாழ்வியலாக இருந்தது, ஆனால், தற்போது, அது வாழ்வாதாரமாக இருந்தாலும், வியாபாரம் எனும் கண்ணோட்டத்தில், பெரிய நிறுவனங்களின் கைகளில் தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள், மக்களின் பசியை ஆற்றக்கூடியவர்கள், அவர்கள் யாரிடமும் அவர்களைத் தாழ்த்திக்கொள்ளக் கூடாது. விவசாயிகளின் கை எப்போதும் உயர்ந்து இருக்கவேண்டும். விவசாயி என்ற பெருமிதம் வேண்டும்.

'உழவன் கணக்குப் பார்த்தால், உழக்குக்கூட மிஞ்சாது' இது பழமொழி. 'உழவன் கணக்குப் பார்த்தால், உலகத்து உயிர்கள் (மனிதன்) ஒன்றுகூட மிஞ்சாது' என்பது புதுமொழி. கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள், தனது புதுக்கவிதையில், விவசாய பெருமக்களைப் பற்றி,

'அன்று நஞ்சை உண்டு, சாகுபடி ஆனது.

இன்று, நஞ்சை உண்டு,சாகும்படி ஆனது' என, வேதனையுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

20 December 2019, 16:08