தேடுதல்

Vatican News
COP25 மாநாடு நடைபெற்ற வேளையில், மத்ரித் நகரில், 'பருவநிலை மாற்றம் நீதி' வேண்டும் என்று போராடிய மக்கள் COP25 மாநாடு நடைபெற்ற வேளையில், மத்ரித் நகரில், 'பருவநிலை மாற்றம் நீதி' வேண்டும் என்று போராடிய மக்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை – ஏமாற்றம் அளித்த COP 25 மாநாடு

அறிவியலாளர்கள் கூறிவரும் எச்சரிக்கைகளுக்கும், உலகத்தலைவர்கள் முன்வைத்திருக்கும் செயல் திட்டங்களுக்கும், மிகப்பெரிய இடைவெளி இருப்பதை, இக்கருத்தரங்கு தெளிவாக்கியது - 'நியூ யார்க் டைம்ஸ்' நாளிதழ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஐ.நா. அவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு, COP 25, இஸ்பெயின் நாட்டின் தலைநகர் மத்ரித்தில், டிசம்பர் 15, இஞ்ஞாயிறன்று நிறைவடைந்தது. டிசம்பர் 2ம் தேதி முதல் 13ம் தேதி முடிய திட்டமிடப்பட்டிருந்த இக்கருத்தரங்கு, இரண்டு நாள்கள் கூடுதலாக நடைபெறவேண்டியதாயிற்று. இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட நாடுகள், பருவநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் குறித்து, ஒருங்கிணைந்த முடிவுகளை எட்டுவதில் சிக்கல்கள் எழுந்ததால், இரண்டு நாள்கள் கூடுதலாகத் தேவைப்பட்டன.

1995ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில், முதன்முறையாக, COP 1 கூடியதிலிருந்து, கடந்த 25 ஆண்டுகளாக, நடைபெற்றுவரும் இக்கருத்தரங்குகளில், COP 25 கூட்டமே, அதிக நாள்கள் நடைபெற்றது. கூடுதல் இரு நாள்கள் நடைபெற்றாலும், COP 25 உறுதியான முடிவுகள் எடுக்கவில்லை என்பது, வேதனையான உண்மை.

கருத்தரங்கின் முடிவில், ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், தன் ஏமாற்றத்தை வெளிப்படையாகவே கூறினார். "COP 25ன் முடிவுகள் குறித்து ஏமாற்றமடைகிறேன். பருவநிலை மாற்றத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடியைத் தீர்க்க, கூடுதலான ஆர்வத்துடன், அர்ப்பணத்துடன், நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுவதற்கு, பன்னாட்டு சமுதாயம், முக்கியமானதொரு வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது" என்று, கூட்டேரஸ் அவர்கள், வருத்தம் தெரிவித்துள்ளார்.

அறிவியலாளர்கள் கூறிவரும் எச்சரிக்கைகளுக்கும், அவற்றை விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளவும் மனமின்றி, உலகத்தலைவர்கள் முன்வைத்திருக்கும் செயல் திட்டங்களுக்கும், மிகப்பெரிய இடைவெளி இருப்பதை, இக்கருத்தரங்கு தெளிவாக்கியது என்று, 'நியூ யார்க் டைம்ஸ்' நாளிதழ் கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், மற்றும், உலகின் பல்வேறு சிறிய தீவு நாடுகள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க பரிந்துரைத்துள்ள திட்டங்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இவை நான்கும் அதிக அளவு கார்பன் வெளியேற்றத்தை உருவாக்கும் நாடுகள் என்பது, கவலை தரும் ஓர் உண்மை.

2020ம் ஆண்டு, டிசம்பரில், பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் COP 26 மாநாட்டின்போது, அனைத்து நாடுகளும், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க, புதிய   பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. (நன்றி: நியூ யார்க் டைம்ஸ், பிபிசி தமிழ்)

17 December 2019, 14:55