தேடுதல்

Vatican News
'இலை வழி நாற்று முறை' என்ற நுட்பத்தைக் கண்டுபிடித்த விவசாயி, எஸ். இராஜரத்தினம் 'இலை வழி நாற்று முறை' என்ற நுட்பத்தைக் கண்டுபிடித்த விவசாயி, எஸ். இராஜரத்தினம் 

பூமியில் புதுமை – இலையை விதையாக்கும் புரட்சி

'இலை வழி நாற்று முறை'யில் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே தனது இலட்சியம் என்று கூறுகிறார், விவசாயி இராஜரத்தினம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இலையைப் பறித்து நட்டால் செடியாக வளரும் என்பதை, தனது கண்டுபிடிப்பின் வழியே நிரூபித்துள்ளார், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, எஸ். இராஜரத்தினம். திசு வளர்ப்பு முறை (Tissue Culture) அடிப்படையில், 'இலை வழி நாற்று முறை' எனப்படும் இந்த நுட்பம் சாத்தியமாகியுள்ளது.

பொதுவாக, விதைகளில் இருந்துதான் வேர் உருவாகி, செடி, மரம் ஆகியவை வளரும். இதனால், மரங்களை வளர்ப்பதற்கு அதிக விதைகள் தேவைப்படுகின்றன. இப்போது சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான விதை இரகங்களும், மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதை சரிசெய்ய களம் இறங்கிய இராஜரத்தினம் அவர்கள், இலையிலிருந்து செடியை உருவாக்கும் 'இலை வழி நாற்று முறை'யை அறிமுகம் செய்து, வேளாண் அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

'இலை வழி நாற்று முறை'யில் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே தனது இலட்சியம் என்றும், இந்த முறை, எதிர்காலத்தில், மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார், இராஜரத்தினம். (நன்றி - பிபிசி தமிழ்)

10 December 2019, 15:14