தேடுதல்

Vatican News
இயற்கை விவசாயப் பண்ணை இயற்கை விவசாயப் பண்ணை  (ANSA)

பூமியில் புதுமை: இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயத்தை அறியாத சமுதாயம் வளர்ந்து விட்டது. அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம் என்று சொல்கிறார், 'கிளாசிக் போலோ ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவராமன்

மேரி தெரேசா: வத்திக்கான்

சிவராமன் அவர்கள், 'கிளாசிக் போலோ (Classic polo)' ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இவரது குடும்பத்தின் பரம்பரைத் தொழில் விவசாயம். ஆனால், ஒரு கட்டத்தில், விவசாயத்தில் செலவும் அதிகமாகியபடியே இருந்தது, பெரிய இலாபமும் இல்லை. அதனால், இவரது குடும்பம், விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல், வியாபாரத்தில் கவனம் செலுத்தத் துவங்கியது. அந்த சமயத்தில், 'வனத்துக்குள்ளே திருப்பூர்' என்ற, இவர்களது அமைப்பிற்காக, விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நட்டனர். அப்போது சிவராமன் அவர்களுக்கு, விவசாயிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான், விவசாயம், ஆத்மார்த்தமான விடயம் என்பது இவருக்குப் புரிந்தது. எனவே இவரது குடும்பம், 'அறப்பொருள் வேளாணகம்' என்ற விவசாயப் பண்ணையைத் துவக்கியது. ஆடு, மாடு, கோழி, மீன், காய்கறி, மரப்பயிர் என, ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்கியது. அதற்கென இடத்தை வாங்கியபோதே, அங்கு ஒரு பள்ளம் இருந்தது. போர்வெல் தண்ணீரை அந்த பள்ளத்தில் நிரப்பி, மீன் வளர்க்கத் துவங்கினர். அதில் உள்ள தண்ணீரை எடுத்து, பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். அருகிலேயே, மாட்டுப் பண்ணை அமைத்து, அங்கிருந்து கிடைக்கும் சாணம், கோமியம் போன்றவற்றை எடுத்து, விவசாய நிலங்களுக்கு, இயற்கை உரமாகப் போடுகின்றனர். அப்படியே, ஆட்டுப் பண்ணையும் அமைத்து, அங்கு கிடைக்கும் உரத்தையும், நிலத்தில் போடுகின்றனர். நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக, மூன்று ஏக்கரில் காய்கறி பயிர்செய்துள்ளனர். ஏற்கனவே, இங்கு இயற்கையாக சில மூலிகைகள் வளர்கின்றன. அவற்றுடன் கூடுதலாக சில மூலிகைகளை வளர்த்து, மூலிகைப் பண்ணையும் வைத்துள்ளனர். 'வாட்ஸ் ஆப் குரூப்' ஒன்றை உருவாக்கி, அவர்களிடம் விளையும் காய்கறிகள், பழங்களைப் பட்டியலிட்டு உள்ளனர் இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி அறையை ஏற்படுத்தி, பிற விவசாயிகளுக்கும், இயற்கை விவசாயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றனர். விவசாயத்தை அறியாத சமுதாயம் வளர்ந்து விட்டது. அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம் என்று சொல்கிறார், சிவராமன் (நன்றி - தினமலர்).

09 December 2019, 15:42