தேடுதல்

Vatican News
மாசடைந்த தண்ணீர் மாசடைந்த தண்ணீர்   (2018 Getty Images)

பூமியில் புதுமை : சாயப்பட்டறைகளால் விவசாயம் பாதிப்பு

காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால், ஐந்து ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அதைப் பயன்படுத்த முடியாததால், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காஞ்சிபுரம் பகுதியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் நத்தப்பேட்டை, வையாவூர், கலியனூர், பூசிவாக்கம் மற்றும் ஊத்துக்காடு ஏரிகள் உள்ளன. இந்த ஐந்து ஏரிகளைச் சுற்றி ஏறத்தாழ ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால், தொடர்ந்து இந்த ஏரிகளில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால், ஏரி நீர் முற்றிலும் மாசடைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

அண்மைக் காலமாக, காஞ்சி நகரப் பாதாளச் சாக்கடையில் சாயப்பட்டறை கழிவுகளையும், அரிசி ஆலை கழிவுகளையும் பலர் அனுமதி இல்லாமல் வெளியேற்றி வருகின்றனர். எனவே கழிவு நீரைச் சுத்திகரிக்கும்போது, சாயப்பட்டறை மற்றும், அரிசி ஆலை மாசின் தன்மையை முழுவதுமாக அகற்ற முடிவதில்லை. அந்த மாசுடன்தான் தண்ணீர் நத்தப்பேட்டை ஏரிக்குச் செல்கிறது. இந்த ஏரியில் மட்டுமின்றி, பல்வேறு கால்வாய்கள் வழியாக கலியனூர் ஏரி, பூசிவாக்கம் ஏரி, வையாவூர் ஏரி, ஊத்துக்காடு ஏரிகளிலும், வேகவதி ஆற்றிலும் சாயப்பட்டறை, அரிசி ஆலை கழிவுகள் வந்து சேருகின்றன. .இதனால் இப்பகுதிகளில் விவசாயம் முழுவதுமாக பாதிப்படைந்துள்ளது. இதுபோல் நத்தப்பேட்டை ஏரியை நம்பி விவசாயம் செய்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தரிசாக மாறி வருகின்றன. கலியனூர், வையாவூர், பூசிவாக்கம், ஊத்துக்காடு ஏரிகளைச் சுற்றியுள்ள நிலங்களும் பாதித்துள்ளன.

27 November 2019, 14:46