தேடுதல்

Vatican News
மரங்களின் காயத்துக்கு  மஞ்சள் பத்துப்போடும் சுபாஷ் சீனிவாசன் மரங்களின் காயத்துக்கு மஞ்சள் பத்துப்போடும் சுபாஷ் சீனிவாசன்  

பூமியில் புதுமை: மரங்களின் காயத்துக்கு மருந்துபோடும் ஆர்வலர்

என்னால் மரத்தை நட முடியவில்லை. ஆனால் வளர்ந்த மரத்தைக் காப்பாற்றி எதிர்கால தலைமுறைக்கு அதை விட்டுச்செல்ல விரும்புகிறேன் - சுபாஷ் சீனிவாசன்

மேரி தெரேசா: வத்திக்கான்

இராமநாதபுரத்தைச் சேர்ந்த, 42 வயது நிரம்பிய, காவல்துறை பணியாளர் சுபாஷ் சீனிவாசன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில், பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் செல்லுமிடங்களில் எல்லாம் மரங்களில் அடித்துள்ள ஆணிகளைப் பிடுங்கி 'மஞ்சள் பத்து' போடும் பணியைச் செய்து வருகிறார். இந்நற்செயல் பற்றி தினமலர் செய்தியாளரிடம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குமுன் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் போக்குவரத்து காவல்துறையினராகப் பணியாற்றியபோது, மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்ற முடிவு செய்தேன். ஆணிகளைப் பிடுங்கினேன். அப்போது எனக்கு மேலதிகாரியிருந்த இருந்தவர், எனது செயலைப் பாராட்டினார். அந்த ஊக்கத்தால் தொடர்ந்து மரத்தில் ஆணிகளைப் பிடுங்கி வருகிறேன். இதற்காக தனி கருவிகளை வைத்துள்ளேன். எங்கு சென்றாலும் அதை எடுத்துச் சென்று விடுவேன். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மரத்தில் ஆணி பிடுங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். சென்னையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். திருச்சியில் மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க வந்தேன். ஓய்வு நேரம் என்பதால் ஆணிகளைப் பிடுங்கி வருகிறேன். ஆணிகளைப் பிடுங்கிய இடங்களில், மஞ்சளும், நல்லெண்ணெய்யும் கலந்து தடவி காயத்தை ஆற்றி வருகிறேன். இதுவரை ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மரங்களில் ஆணி பிடுங்கி உள்ளேன். என்னால் மரத்தை நட முடியவில்லை. ஆனால் வளர்ந்த மரத்தைக் காப்பாற்றி எதிர்கால தலைமுறைக்கு அதை விட்டுச்செல்ல விரும்புகிறேன்.

அண்மையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மரங்களில் அடித்திருக்கும் ஆணியைப் பிடுங்கி, அந்த இடத்தில் நல்லெண்ணெய் மஞ்சள் தடவிக் கொண்டிருந்தவரைப் பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

28 November 2019, 15:00