தேடுதல்

வற்றிப்போன நாக ஆற்றுக்கு உயிர்கொடுத்த வேலூர் பெண்கள் வற்றிப்போன நாக ஆற்றுக்கு உயிர்கொடுத்த வேலூர் பெண்கள் 

பூமியில் புதுமை: வற்றிப்போன ஆற்றுக்கு உயிர்கொடுத்த பெண்கள்

பாலாற்றின் பிற கிளை ஆறுகளின் பாதைகளில் ஏறத்தாழ 2.200 நீர்வள கிணறுகள் அமைக்கப்பட்டுவிட்டன. அதிலும் பெண்களின் உழைப்புதான் அதிகமாக உள்ளது - ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்

மேரி தெரேசா – வத்திக்கான்

கர்நாடக மாநிலத்தின் நந்தி குன்றுகளில் உற்பத்தியாகின்ற பாலாற்றை, விவசாயிகள், தென்னிந்திய விவசாயத்தின் தாய் எனச் சொல்கின்றனர். இது கர்நாடகத்தில் 93 கி.மீ., ஆந்திராவில் 33 கி.மீ., மற்றும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரம் பாய்ந்து, சென்னைக்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாறினால், தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகியவை பயன்பெறுகின்றன. ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் ஓடும் பாலாற்றிற்கு ஏழு கிளை ஆறுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான நாக ஆறு, வேலூர் மாவட்டத்தில் பாம்புபோல வளைந்து 14 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்கு உதவிய நாக ஆறு, ஆலை கழிவுகள் தேங்குவது, விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆக்கிரமிப்புகள் போன்ற பல காரணங்களால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வற்றிக்கிடந்தது. மகாத்மா காந்தி தேசிய 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், வேலூர் மாவட்டத்தில் இருபதாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் குழுவாக இணைந்து, நாக ஆறு செல்லும் பாதையில் முன்னூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து, கற்களை அடுக்கி, 349 தடுப்பணைகளைக் கட்டி, மழைநீரைத் தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர். இப்பெண்களின் முயற்சியால் பல கிராமங்களில் நான்கு முதல் ஏழு அடிவரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நாக ஆறு மீட்பு பணிகளால் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. கொள்ளு, கேழ்வரகு விளைந்த நிலங்களில், தற்போது தண்ணீர் அதிகம் தேவைப்படும் மஞ்சள் மற்றும், வாழை மரங்களும் விளைந்து நிற்கின்றன. ஒரு போகம் விளைச்சலுக்கே சிரமப்பட்ட விவசாயிகள், தற்போது இரு போகம் அறுவடை செய்கிறார்கள் என்று, முப்பது வயது நிரம்பிய சரிதா கூறியுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளில் பெய்த மழை அளவைக் கொண்டுபார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் நாக ஆறு ஏறத்தாழ ஆயிரம் மில்லிமீட்டர் மழை அளவைப் பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த ஆற்றின் பாதையில் நீர் தேங்கி, 1,000 மில்லிமீட்டர் மழைநீர் வீணாகாமல் பயன்படும். பாலாற்றின் பிற கிளை ஆறுகளின் பாதைகளில் ஏறத்தாழ 2.200 நீர்வள கிணறுகள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும், அதிலும் பெண்களின் உழைப்புதான் அதிகமாக உள்ளது என்றும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2019, 14:27