தேடுதல்

Vatican News
வட அமெரிக்காவிலுள்ள ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி வட அமெரிக்காவிலுள்ள ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி  

பூமியில் புதுமை: பூச்சிகளின் அழிவு, சுற்றுச்சூழலின் அழிவு

பறவைகள், நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள், வௌவால்கள், மற்றும் பல்லிகள் ஆகியவற்றுக்கு, பல பூச்சிகள் உணவாக உள்ளது. மேலும், பூச்சிகளால்தான், தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

பூச்சிகள் என்றாலே பலருக்கும் எரிச்சல் வரும். ஆனால், பறவைகள், நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் ஆகியவற்றுக்கு பல பூச்சிகள் உணவாக உள்ளன. பூச்சிகளால்தான் தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. பெரும்பாலும் காட்டுத் தேனீக்கள் உருவாக்கும் மகரந்த சேர்க்கையினாலேயே நாம் உண்ணும் ஏறக்குறைய முப்பது விழுக்காட்டு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. பூச்சிகள், உயிரற்ற தாவரங்களையும் விலங்குகளையும் சாப்பிட்டு மறுசுழற்சி செய்வதன் மூலம், அவை பூமியை சுத்தமாக வைத்திருக்கின்றன. இதனால் மண் வளம்பெறுகிறது, இதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தினால் செடிகள் வளருகின்றன. இன்று உலகில், ஐம்பது இலட்சம் முதல், ஒரு கோடி பூச்சியினங்கள் உள்ளன. இவை, உலகிலுள்ள அனைத்து விலங்கின வகைகளுள், ஏறத்தாழ மூன்றில் நான்கு பங்கு என்று, பூச்சியியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பூச்சியினங்கள்

பல பூச்சிகளுக்கு பறப்பது கைவந்த கலை. தும்பிகள் பின்னோக்கிப் பறக்கின்றன. கொசு தலைகீழாகவும் பறக்கும் திறமை கொண்டது. வெப்பமண்டலத்தில் வாழும் சில குளவிகளும், தேனீக்களும் மெல்லிய இரைச்சலோடு மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன. வட அமெரிக்காவிலுள்ள ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி (monarch butterfly), இடப்பெயர்ச்சிக்காக 3,010 கிலோ மீட்டர் தூரம் பறந்து செல்கிறது. ஹோவர் ஃபிளைஸ் (hover flies) என்ற சிறு ஈக்கள், தேன்சிட்டுப் பறவைகளைவிட வேகமாக, விநாடிக்கு ஆயிரம் தடவை சிறகை அடித்துக்கொள்கின்றன. ஈக்கள் நுண்ணிய பார்வை கொண்டவை. ஈக்களின் கூட்டுக் கண்ணில் (compound eye) ஆயிரக்கணக்கான, ஆறு பக்க லென்சுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தியங்கும் திறன் உண்டு. அதனால்தான் மனிதரால் எளிதாக ஈயை அடிக்க முடிவதில்லை. மனிதரால் பார்க்க முடியாத புறஊதா ஒளியை சில பூச்சிகளால் பார்க்க முடிகிறது. பல பூச்சிகளின் கண்கள் திசைக்காட்டியின் வேலையைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, தேனீக்களாலும் குளவிகளாலும் ஒளிக்கதிரின் திசையை உணர்ந்துகொள்ள முடியும். இந்தத் திறமை இவற்றிற்கு இருப்பதால்தான், இரை தேடி வெகு தூரம் சென்றாலும், வழி தவறாமல் கூட்டுக்குத் திரும்பி வர முடிகிறது. தற்போது உலகம் முழுவதும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பூச்சிகளின் அழிவு என்பது, சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அழிவின் தொடக்கம் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்

11 November 2019, 14:58