தேடுதல்

Vatican News
விவசாய நிலம் விவசாய நிலம்  (ANSA)

பூமியில் புதுமை : விவசாயம் தரும் மனதிருப்தி வேறு எங்குமில்லை

அனைத்து தொழிலுக்கும் அடிப்படை விவசாயம்தான். தொழில்களில் முதன்மையானதுவும் அதுதான். எனவே நானும் விவசாயியாகவே வாழ விரும்புகிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

வறட்சியால் விவசாய நிலங்கள் காய்ந்துபோய் கிடக்கும் காலகட்டத்தில்கூட, ஈரோடு மாவட்டத்தின் எல்லை கிராமமான வேடசின்னானூரில் மழை இல்லையென்றாலும், ஒரு நிலத்தில் தொடர்ந்து விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம், சொட்டு நீர்ப் பாசனம் வழியாக. அங்கு, ஒரு பெண், அவரது 3 மகள்களுடன் விவசாய நிலத்துக்குள் இறங்கி மஞ்சள் நடவு செய்து கொண்டிருக்கிறார். குடும்பத்தலைவரும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன்,  பிற விவசாயிகளுக்கும் மஞ்சள் பயிரிடுதலின் மகிமை பற்றி பரப்பி வருகிறார். அந்தப் பெண்மணியின் மூத்த மகள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்கிறார். அவர், “விவசாயம்தான் எனக்கு பிடித்தமானது. படிப்பை முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் போக மனமில்லை. விவசாயத்தைத் தேடி வந்துவிட்டேன். இதில் கிடைக்கும் மனதிருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை” என்கிறார். எம்.காம் பட்டதாரியான 2-வது மகள். “அனைத்து தொழிலுக்கும் அடிப்படை விவசாயம்தான். தொழில்களில் முதன்மையானதுவும் அதுதான். எனவே நானும் விவசாயியாகவே வாழ விரும்புகிறேன்” என்கிறார். 3-வது மகள், கோவையில் ஒரு கல்லூரியில் உணவு பதப்படுத்துதல் துறையில் படித்துவருகிறார். “விவசாய விளை பொருட்களை மதிப்புள்ள கூட்டுப்பொருட்களாக மாற்றவேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். அதற்காகவே நான் இத்துறையை தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்கிறார்.

5 பேர் கொண்ட இக்குடும்பம், விவசாயத்தை, தங்கள் தொழிலாகவும், வாழ்வாகவும் கொண்டுள்ளது.

29 November 2019, 14:33