தேடுதல்

Vatican News
திறந்த வெளியில் விளையாடும் குழந்தைகள் திறந்த வெளியில் விளையாடும் குழந்தைகள்  (AFP or licensors)

100 கோடிப் பேருக்கு தடுக்கவல்ல பார்வை பிரச்சனை

சிறார், போதுமான நேரம், கட்டடங்களுக்கு வெளியே செலவிடாததால், அவர்கள் மத்தியில் கிட்டப்பார்வை பிரச்சனை அதிகரித்து வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் பார்வைக்குறைபாடு பிரச்சனையால் 220 கோடிப் பேர் துன்புறும்வேளை, கண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை, உலக அளவில் அதிகரித்து வருகின்றது என்று, WHO எனும், உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது

பார்வைத்திறன் பற்றிய முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா.வின் நலவாழ்வு நிறுவனம், கருவிழித்தொற்று நோயின் (trachoma) பொதுவான தாக்கம், எட்டு நாடுகளில் போன்ற அகற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அதேநேரம், கணனியில் அதிகநேரம் செலவிடுவது உள்ளிட்ட இக்கால வாழ்வுநிலைகளால், பார்வைப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கை பற்றி ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய, WHO நிறுவனத்தின் மருத்துவர் Alarcos Cieza அவர்கள், தடுக்கவல்ல பார்வை பிரச்சனைகளால், உலகில் நூறு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறார், போதுமான நேரம், கட்டடங்களுக்கு வெளியே செலவிடாததால், அவர்கள் மத்தியில் கிட்டப்பார்வை பிரச்சனை அதிகரித்து வருகின்றது என்றும் கூறினார்.

குறைந்த மற்றும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளன எனவும், புலம்பெயர்ந்தோர், பூர்வீக இன மக்கள், மாற்றுத்திறனாளிகள், கிராமங்களில் வாழ்வோர் உட்பட, பெண்கள், பார்வைக்குறை பிரச்சனையால் அதிகம் துன்புறுகின்றனர் எனவும், WHO நிறுவனம் அறிவித்துள்ளது.

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டால், 6 கோடியே 50 இலட்சம் பேரின் பார்வைக்குறைபாடு ஒரே இரவில் சரியாகிவிடும் என்றும், மூக்குக்கண்ணாடி இல்லாததால், 80 கோடிக்கும் அதிகமானவர்கள், ஒவ்வொரு நாளும் வேலைகளைச் செய்ய கஷ்டப்படுகின்றனர் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (UN)

09 October 2019, 15:39