தேடுதல்

Vatican News
மகாத்மா காந்தி மகாத்மா காந்தி   (AFP or licensors)

அமைதியின் அடையாளம், மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி அவர்கள், நாம் செய்யும் செயலுக்கும், நம்மால் செய்ய முடிந்த செயலுக்கும் இடையே இடைவெளி இருப்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் - ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரெஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாம் செய்யும் செயலுக்கும், நம்மால் செய்ய முடிந்த செயலுக்கும் இடையே இடைவெளி இருப்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவந்த மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நாளை நினைவுகூரும் இவ்வேளையில், அனைவருக்கும் நல்லதொரு வருங்காலத்தை அமைக்கும் நோக்கத்தில், இந்த இடைவெளியை அகற்றி, பாலங்களைக் கட்டுவதற்கு எல்லாரும் முயற்சிக்குமாறு, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி, உலக வன்முறையற்ற நாளாக, ஐ.நா.வால் சிறப்பிக்கப்பட்டுவரும்வேளை, இந்நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், கூட்டேரெஸ்.

மகாத்மா காந்தி அவர்களின் தொலைநோக்குப் பார்வை, ஐ.நா. நிறுவனத்தின் பணிகள், மற்றும், உலகில் இடம்பெறும் ஏனைய நற்பணிகள் வழியாக, உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது என்று, அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்தல், சமத்துவம், நீடித்த வளர்ச்சி, இளையோரை முன்னேற்றுதல், போர்களுக்கு அமைதியான தீர்வு காணல் ஆகிய ஐ.நா. நிறுவனத்தின் பணிகள் வழியாகவும், காந்திஜி அவர்களின் கொள்கைகள் உலகில் பரவி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள கூட்டேரெஸ் அவர்கள், குழப்பமான சூழல்கள் நிறைந்த இக்காலத்தில் பல வடிவங்களில் வன்முறைகள் இடம்பெறுவதும் குறித்தும் எச்சரித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் முதல், ஆயுதம் தாங்கிய போர்கள் வரை, உலகில் அழிவைக்கொணரும் நடவடிக்கைகள் பற்றியும், வறுமை, மனித உரிமைகள் மீறப்படும் அநீதிகள் முதல், வெறுப்பைத்தூண்டும் பேச்சுகள் வரை ஏற்படுத்தும் கொடுமைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார், கூட்டேரெஸ்.

அக்டோபர் 2, இப்புதனன்று, உலக வன்முறையற்ற நாளும், மகாத்மா காந்தி அவர்கள் பிறந்ததன் 150வது ஆண்டு நிறைவும் சிறப்பிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த அக்டோபர் மாதம் 2ம் தேதியை, உலக வன்முறையற்ற நாளாக, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று உருவாக்கியது. (UN)

02 October 2019, 16:05