தேடுதல்

Vatican News
எத்தியோப்பிய பிரதமருக்கு நொபெல் அமைதி விருது 2019 எத்தியோப்பிய பிரதமருக்கு நொபெல் அமைதி விருது 2019  (AFP or licensors)

எத்தியோப்பிய பிரதமருக்கு நொபெல் அமைதி விருது

2018ம் ஆண்டில் எத்தியோப்பிய பிரதமராகப் பதவியேற்ற அபி அஹ்மத் அவர்கள், உடனடியாக ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி நடவடிக்கையாளர்களை சிறையிலிருந்து விடுதலை செய்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

எத்தியோப்பியாவின் கடும் எதிரியாக இருந்த எரிட்ரியாவுடன், அமைதி ஏற்பட உழைத்ததைப் பாராட்டும் விதமாக, எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் (Abiy Ahmed) அவர்களுக்கு, 2019ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவிற்கும், எரிட்ரியாவிற்கும் இடையே எல்லைத் தகராறில், 1998ம் ஆண்டு முதல், 2000மாம் ஆண்டு வரை, ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதி ஏற்படவும், பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்ததற்காக, பிரதமர் அபி அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக, அக்டோபர் 11, இவ்வெள்ளியன்று, ஆஸ்லோ நொபெல் விருது குழு அறிவித்துள்ளது.

நூறாவது அமைதி நொபெல் விருதைப் பெறும் பெருமைக்குரியவரான எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் அவர்கள், வருகிற டிசம்பர் மாதம், நார்வே நாட்டு ஆஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவ்விருதைப் பெறுவார்.

இவ்விழாவில் ஒரு தங்கப் பதக்கமும், இந்திய மதிப்பில் ஏறக்குறைய ஆறரைக் கோடி ரூபாய் (ஏறக்குறைய 9,00,000 டாலர்) பரிசுத்தொகையும், பிரதமர் அபி அவர்களுக்கு வழங்கப்படும்.

2019ம் ஆண்டின் இவ்விருதுக்கென, 223 தனி நபர்கள் மற்றும், 78 நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

2018ம் ஆண்டில் எத்தியோப்பிய பிரதமராகப் பதவியேற்ற அபி அஹ்மத் அவர்கள், உடனடியாக நாட்டில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆர்வலர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். நாடுகடத்தப்பட்டிருந்த ஆர்வலர்கள் நாட்டிற்குள் வர அனுமதித்தார். மிக முக்கியமாக, எரிட்ரியாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1979ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது, புனித அன்னை தெரேசா அவர்களுக்கு வழங்கப்பட்டது. (Agencies)

11 October 2019, 15:26