தேடுதல்

Vatican News
இயற்கையை பாதுகாக்க ஒன்றிணையும் அமேசான் பூர்வீக இன தலைவர்கள் இயற்கையை பாதுகாக்க ஒன்றிணையும் அமேசான் பூர்வீக இன தலைவர்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : மரங்கள், செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளது

“இந்த உலகில் வாழும் மற்றவர்களுக்கு காடுகளின் தேவை புரியாமல் இருக்கலாம். ஆனால், எங்களுக்கும் எங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் காடுகள் மிகவும் தேவை” எனக் கூறியுள்ளனர், அமேசான் பழங்குடியினத்தவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

‘அமேசான் காடுகளுக்காக கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தத் தயார்’ என, உத்வேகத்துடன் பேசி வருகின்றனர், முரா பழங்குடிகள். அமேசான் மழைக்காடுகளைக் காக்க, இவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம், பிரேசில் அரசோடு, இன்று தொடங்கியிருக்கலாம். ஆனால், பிரேசில், காலனியாதிக்கத்தில் இருந்தபோதே, அமேசானுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள், இந்த முராக்கள். ‘’இங்குள்ள அனைத்து மரங்கள், செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளது. அவை அனைத்தும் வாழ வேண்டும். அதுவும், அவை, அதனதன் சொந்த இடத்திலேயே வாழ வேண்டும். எங்களைப் பொருத்தவரை, இன்று நடப்பது மிகப்பெரும் அழிவு. எங்களுக்கு எதிராக செய்யப்படும் பெரும் கொடுமை. எங்கள் இறுதித் துளி இரத்தத்தைக் கொடுத்து போராடி, இந்தக் காட்டை காப்பாற்றுவோம். அமேசான் காடுகளின் அழிவு, தினம்தினம் அதிகரித்து வருவதை, நாங்கள் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். ஒவ்வொரு நிமிடமும், இந்தக் காடு, தன் இறுதி நாளை நோக்கி சென்று கொண்டிருப்பது, மிகவும் வேதனையாக உள்ளது. காலநிலை மாற்றத்தை, எங்களால் உணர முடிகிறது. இந்த உலகில் வாழும் மற்றவர்களுக்கு காடுகளின் தேவை புரியாமல் இருக்கலாம். ஆனால், எங்களுக்கும் எங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் காடுகள் மிகவும் தேவை” எனக் கூறியுள்ளார், பழங்குடி இன தலைவர், ரைமுண்டோ முரா.

இதற்கிடையே, அமேசானின் மற்றொரு பகுதியில் வசித்துவரும் பரோனி பழங்குடிகளும், தங்கள் காட்டுத் தாயை காக்க புறப்பட்டனர். ஆனால் அவர்கள் தேர்வு செய்த வழி போர் அல்ல, சட்டம். அமேசான் காட்டை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு கண்டுகொள்ளாததால், நீதிமன்றம் சென்றனர். வழக்கில் வெற்றிப் பெற்று, தடையும் பெற்று, அமேசானைக் காத்துக் கொண்டனர்.

தென் அமெரிக்க பழஙகுடி இன மக்கள் போரிட்டு வருவது அமேசானுக்காக மட்டுமல்ல, இந்த உலகத்திற்காகவும்தான், இந்த உலகம் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகவும்தான். (நன்றி : ‘வணக்கம் தமிழா’ இணையதளம்)

25 October 2019, 11:28