தேடுதல்

Vatican News
அமேசான் ஆற்றின் கிளை ஆறு ஒன்று அமேசான் ஆற்றின் கிளை ஆறு ஒன்று  (AFP or licensors)

பூமியில் புதுமை: அமேசான் ஆற்றின் அதிசயங்கள்

அமேசான் ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு, ஆன்டெஸ் மலையின் வளர்ச்சியால், கிழக்கு நோக்கிப் பாய்கிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

உலகிலுள்ள 15 நீளமான ஆறுகளில், ஆப்ரிக்காவில் 11 நாடுகளில் பாயும் நைல் (6,693 கி.மீ.) முதல் இடத்தில் இடம்பெற்றிருப்பினும், தென் அமெரிக்காவில் ஒன்பது நாடுகளில் பாயும் அமேசான் ஆற்றின் நீரின் அளவை வைத்து, அதை உலகின் பெரிய ஆறு என புவியியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். 6,436 கி.மீ. நீளமுடைய அமேசான் ஆறு, ஒரு வினாடிக்கு, ஏறத்தாழ 2,09,000 கன மீட்டர் அளவு தண்ணீரையும், ஆண்டுக்கு, ஏறக்குறைய 6,591 கன கிலோ மீட்டர் அளவு தண்ணீரையும் கொணர்கிறது. இந்த அளவு, இந்த ஆறுக்கு அடுத்து உலகிலுள்ள ஏழு மிக நீளமான ஆறுகள் வெளியேற்றும் நல்ல நீரின் அளவைவிட அதிகம். 70,50,000 சதுர கிலோ மீட்டர் அளவிலான இதன் வடிகால் ஆற்றுப்படுகையும் உலகிலேயே பெரியதாகும். அமேசான் ஆற்றின் ஐந்தில் ஒரு பகுதி பிரேசில் நாட்டில் பாய்ந்து இறுதியில், அட்லாண்டிக் பெருங்கடலில் சங்கமமாகிறது. இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு, ஆன்டெஸ் மலையின் வளர்ச்சியால், கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் என்ற பெயர், ha-maz-an என்ற ஈரானியச் சொல்லாடலிலிருந்து திரிந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ha-maz-an என்பதற்கு, பெர்சிய மொழியில், "மாவீரர்கள்" என்றும், *ஒன்றுசேர்ந்து போரிடுதல் என்றும் அர்த்தமாகும். அமேசான் பகுதியில் வாழ்ந்த பூர்வீக இன மாவீரர்கள், 16ம் நூற்றாண்டில், Francisco de Orellana என்பவரின் குழுவைத் தாக்கியதையொட்டி, அந்த ஆற்றுக்கு அமேசான் ஆறு என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த போர் வீரர்களில், பூர்வீக இனப் பெண்களும் இருந்துள்ளனர். இந்தப் பழங்குடி பெண்கள், கிரேக்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ஈரானிய Scythian, மற்றும், Sarmatian இனங்களோடு தொடர்புடையவர்கள் என, நாடுகாண் பயணி Francisco de Orellana குறிப்பிட்டுள்ளார்.

03 October 2019, 13:37