தேடுதல்

Vatican News
அமேசான் பகுதியில் காடுகள் அழிப்பு தொடர்கிறது அமேசான் பகுதியில் காடுகள் அழிப்பு தொடர்கிறது  (AFP or licensors)

பூமியில் புதுமை : இயற்கை இயற்கையாக எரிந்ததா?

உலகின் கார்பன் டை ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில் அமேசான் காடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் என்ற நிலையில், புவியின் நுரையீரல் எரிந்து வருகிறது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமேசான் மழைக்காடு என்பது, தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு, ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும், இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. உலகில் அறியப்பட்ட பத்தில் ஓர் உயிரினம், அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும். அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.

உலகில் வாழும் உயிரின வகைகளுள், பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று, இம்மழைக் காடுகளில் வாழ்கிறது. உலகின் மழை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் காடு, பூமிக்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன. உலகின் கார்பன் டை ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில், அமேசான் காடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் நிலையில், புவியின் நுரையீரல் எரிந்து வருகிறது என, இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். (நன்றி: விக்கிபீடியா)

02 October 2019, 15:52