தேடுதல்

Vatican News
அழிக்கப்பட்டுவரும் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுவரும் அமேசான் காடுகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை: அமேசான் மழைக்காடுகளில் சூழலியல் அச்சுறுத்தல்

உலக வங்கியின் கணிப்புப்படி, 2012ம் ஆண்டில், பெரு நாட்டில் இடம்பெற்ற மர ஏற்றுமதிகளில், 80 விழுக்காடு சட்டவிரோதமாக வெட்டப்பட்டவை.

மேரி தெரேசா – வத்திக்கான்

தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் பாதிக்கும் அதிகமான பகுதி, காடுகள் மற்றும், மழைக்காடுகளால் நிறைந்துள்ளது. உலகில் அதிகமான தண்ணீரைக் கொண்டுள்ள அமேசான் ஆறு, இந்நாடு வழியாகப் பாய்கின்றது. அந்நாட்டில், வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகள், அம்மண்ணிற்கேயுரிய செடி வகைகள் மற்றும், விலங்குகளைக் கொண்டிருக்கின்றன. இம்மழைக்காடுகள், இப்பூமியில் உற்பத்தியாகும் ஆக்ஜிசனில் இருபது விழுக்காட்டிற்கு மேல் உற்பத்தி செய்கின்றன. இக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ எழுபது விழுக்காடு தாவர வகைகளில், புற்றுநோய் தடுப்புக்குரிய குணங்கள் உள்ளன எனவும், அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்ற பூர்வீக இனங்களால் பயன்படுத்தப்படும் 90 விழுக்காடு மரம், செடி வகைகள், நவீன அறிவியலால் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. தற்போது அமேசான் மழைக்காடுகளில், ஏறத்தாழ 9 இலட்சத்து ஐம்பதாயிரம் பூர்வீக இன மக்கள், வாழ்கின்றனர். இவர்கள், 400 இனங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும், 330 மொழிகளைப் பேசுகின்றவர்கள். ஏறத்தாழ ஐம்பது இனங்கள், அடர்ந்த காடுகளில், வெளியுலகத் தொடர்பின்றி வாழ்வதாக நம்பப்படுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, பெரு நாட்டு அமேசான் காடுகளில் சட்டவிரோத மரம் வெட்டுதல் கடும் பிரச்சனையாக மாறியுள்ளது. உலக வங்கியின் கணிப்புப்படி, 2012ம் ஆண்டில், பெரு நாட்டில் இடம்பெற்ற மர ஏற்றுமதிகளில், 80 விழுக்காடு சட்டவிரோதமாக வெட்டப்பட்டவை. 2014ம் ஆண்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நான்கு பூர்வீக இனத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். அக்காடுகள், எண்ணெய் வளம் மற்றும் கனிம வளங்களைக் கொண்டவை. பெரு நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத தங்கச்சுரங்கப் பணிகள் மற்றும் எண்ணெய் வளச் சுரண்டல்கள், சூழலியலுக்கு கடும் சேதங்களைக் கொணர்கின்றன. அதோடு, அங்கு வாழ்கின்ற பல பூர்வீக இனத்தவரின் இருப்புக்கும் ஆபத்தாக உள்ளன என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.    

24 October 2019, 14:13