தேடுதல்

Vatican News
ஈக்குவதோர் அமேசான் மழைக்காடுகளில் அரிய குரங்கு இனம் ஈக்குவதோர் அமேசான் மழைக்காடுகளில் அரிய குரங்கு இனம்  

பூமியில் புதுமை: ஈக்குவதோர் அமேசான் மழைக்காடுகள்

ஈக்குவதோர் நாட்டில் வாழ்கின்ற மக்களில் 25 விழுக்காட்டினர், பூர்வீக இனத்தவர். 11 ஆயிரம் ஆண்டுகள் பழமைகொண்ட இந்த இனத்தவர், ஆசியாவிலிருந்து அப்பகுதிக்குச் சென்று குடியேறியவர்கள் என நம்பப்படுகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான்

அமேசான் மழைக்காடுகள், இந்த உலகின் மிகப் பெரிய வெப்பமண்டல மழைக்காடுகள். இவை, பிரேசில், கொலம்பியா, பெரு, ஈக்குவதோர் உள்ளிட்ட ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளன. தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஈக்குவதோர் நாட்டின் அமேசான் ஆற்றுப்படுகை, அதன் மொத்த பரப்பளவில், இரண்டு விழுக்காடாகும். எனினும், அது, அந்நாட்டின் 80 விழுக்காட்டு காட்டுப் பகுதியாக உள்ளது. அந்நாட்டின் 34.5 விழுக்காடு நிலப்பகுதியில், 98 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு காடுகள் உள்ளன. அக்காடுகளில் நிறைந்துள்ள எண்ணெய் வளங்கள் சுரண்டப்படுவதற்குமுன், அந்நாட்டில், 2 கோடியே 60 இலட்சம் பரப்பளவில் காடுகள் இருந்தன. மனிதரின் பேராசை நடவடிக்கைகளால், 2001ம் ஆண்டுக்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், காடுகளில், ஏறத்தாழ ஆறு இலட்சம் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஈக்குவதோர் நாட்டின் அமேசான் ஆற்றுப்படுகையில் 800 வகையான மீன்கள், 350 வகையான ஊர்வன, 300 வகைகளுக்கும் அதிகமான பாலூட்டிகள், ஆயிரக்கணக்கான மரம், செடி வகைகள், ஆயிரக்கணக்கான பூச்சியினங்கள் உள்ளன. ஒரு ஏக்கர் மழைக்காடுகளில் மட்டும் எழுபதாயிரம் பூச்சியினங்கள் உள்ளனவாம். ஈக்குவதோர் நாட்டு அமேசான் ஆற்றுப்படுகையிலுள்ள 1,699 வகையான பறவையினங்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்குமாம். உலகின் ஆறுகளில், அதிகமான நீரைக் கொண்டுள்ள அமேசான் ஆறே, ஈக்குவதோர் நாட்டில்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 1541ம் ஆண்டில், பெரிய இஸ்பானிய நாடுகாண் பயணியர் குழு ஒன்று, புராணக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள எல் தோராதோ நகரைத் தேடி, ஈக்குவதோர் தலைநகர் குய்ட்டோவிலிருந்து புறப்பட்டது. அச்சமயத்தில் ஓராண்டு சென்று, அப்பெரிய குழுவிலிருந்து, பிரான்சிஸ்கோ தெ ஒரெலானா என்பவர் தலைமையில் மற்றொரு குழு பிரிந்தது. ஒரெலானா தலைமையில் சென்ற குழுவே அமேசான் ஆற்றைக் கண்டு, அதிலேயே நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் அட்லாண்டிக் பெருங்கடல் வரை சென்றது. அப்பயணத்தில், அக்குழு மூர்க்கத்தனமான சில பழங்குடி இனப் பெண்களைக் கண்டது. அப்பெண்களை வைத்து அந்த ஆற்றிற்கு, அமேசான் என அக்குழு பெயரிட்டது. ஈக்குவதோர் நாட்டில் வாழ்கின்ற மக்களில் 25 விழுக்காட்டினர், பூர்வீக இனத்தவர். மேலும் எழுபது விழுக்காட்டினர், பூர்வீக மற்றும், ஐரோப்பிய கலப்பினங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நாட்டிலுள்ள 14 பூர்வீக இனங்களில், பத்து, அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன.          

28 October 2019, 12:49