தேடுதல்

Vatican News
சென்னையில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ள கே.மகேந்திரன் சென்னையில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ள கே.மகேந்திரன்  

பூமியில் புதுமை: விளம்பரமில்லா தண்ணீர் பந்தல்

பலர், சிகரெட், மது, குட்கா, டீ போன்ற பழக்கங்களுக்குப் பணத்தைச் செலவழிக்கும்வேளை, நான் அவற்றைத் தவிர்த்து, அவற்றிற்குச் செலவு செய்யும் பணத்தை, இந்த தண்ணீர் பந்தலுக்கு பயன்படுத்துகிறேன் - கே.மகேந்திரன்

மேரி தெரேசா – வத்திக்கான்

கோடை காலத்தில், பல பிரமுகர்கள், தண்ணீர் பந்தல்கள் அமைத்து விளம்பரம் தேடிக்கொள்வது வாடிக்கையாக நிகழ்வது. ஆனால், சென்னையில் கே.மகேந்திரன் என்பவர், தனியாளாக, தண்ணீர் பந்தல் அமைத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக பலரின் தாகத்தைத் தணித்து வருகிறார். கோயம்பேடு-பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல்துறை கண்காணிப்பு அருகே, இயங்கி வரும் இவரது தண்ணீர் பந்தலில், வருவோர் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள், மின் விசிறி, நேரத்தை கணிக்க கடிகாரம் போன்றவை உள்ளன. இங்கு, துப்புரவு ஊழியர்கள் முதல் வாகனங்களில் செல்வோர் வரை, ஒரு நாளைக்கு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிநீர் அருந்தி செல்கின்றனர். கே.மகேந்திரன் அவர்கள், தினமலர் நாளிதழுக்கு இவ்வாறு பேட்டியளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், சக்கரத்தாமடை கிராமத்தில், எங்கள் வீட்டு திண்ணையில், மண் பானையில் தண்ணீர் வைத்திருப்பர், வெயில் காலத்தில் பலர் குடிநீர் அருந்திச் செல்வர். ஆனால், சென்னையில் திறக்கப்படும் தண்ணீர் பந்தல்கள், ஒரு சில நாட்களில், தண்ணீர் இன்றி காட்சியளிக்கும். இதற்கு முன் மாதிரியாக, ஒரு தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதற்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இடத்தை தேர்வு செய்தபின், தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதிக்காக, பலமுறை அலைந்தேன். அதன்பின், அப்போதையை கோயம்பேடு ஆய்வாளர் அழகு அவர்களின் உதவியுடன், நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி என, அனுமதி பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் பந்தல் அமைத்தேன். இங்கு வழங்கப்படும் தண்ணீர் தரமானது என்பதற்காக, உணவு பாதுகாப்புத் துறையிடம் இருந்து தரச்சான்றும் பெற்றுள்ளேன். ஒரு நாளைக்கு, இருபது கேன் தண்ணீர் செலவாகிறது. கோடைக்காலத்தில், நாற்பது முதல் அறுபது கேன் தண்ணீர் செலவாகிறது. இதுவரை, பத்து இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தண்ணீர் பந்தல் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, செடிகள் வைத்தேன், அவற்றில், 15 மரங்களாக வளர்ந்துள்ளன. இங்கு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படுகிறது. நான், இருபது ஆண்டுகளாக கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து வருகிறேன். முதலில் தொழிலாளியாகத் துவங்கி, தற்போது பழச்சந்தையிலிருந்து. பழங்களை வாங்கி, சென்னையில் உள்ள முக்கியமான கடைகளுக்கு அனுப்பும் பணியைச் செய்து வருகிறேன். ஒவ்வொரு மனிதரும் சிகரெட், மது, குட்கா, டீ, காப்பி என, தினமும் பணம் செலவு செய்கின்றனர். நான் இதுபோன்ற பழக்கங்களைத் தவிர்த்து, அதற்கு செலவு செய்யும் பணத்தை, இந்த தண்ணீர் பந்தலுக்குப் பயன்படுத்துகிறேன். இதனால், எனக்கு மன நிறைவு கிடைக்கிறது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதால், நான் உட்பட இங்குள்ள பலரின் போராட்டத்திற்குப்பின், 108 ஆம்புலன்ஸ் நிறுத்த இடத்தை உருவாக்கி உள்ளோம். இதைப்போல், மற்ற இடங்களிலும் தண்ணீர் பந்தல் அமைக்க திட்டமிட்டுள்ளேன். இதைப் பார்த்து, மற்றவர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு, மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

31 October 2019, 13:33