தேடுதல்

அமேசான் காடுகளில் நீலநிற புலி அமேசான் காடுகளில் நீலநிற புலி 

பூமியில் புதுமை: அமேசான் காடுகளில் புதிய பல்லுயிர்கள்

அமேசான் மழைக்காடுகளில், இதுவரை அறியப்படாத 216 வகை தாவரங்கள், 93 வகை மீன்கள், 32 வகை நிலநீர் வாழிகள், 20 வகை பாலூட்டிகள், 19 வகை ஊர்வன, ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான்

அமேசான் மழைக்காடுகள் என்பது, தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏறக்குறைய எழுபது இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு, அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில், 25 இலட்சம் பூச்சியினங்களும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தாவர வகைகளும், ஏறத்தாழ இரண்டாயிரம் பறவை, பாலூட்டி இனங்களும் வாழ்கின்றன. உலகிலுள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று, இம்மழைக்காடுகளில் வாழ்கிறது. இந்த உயிரினங்கள் பற்றி 2014 மற்றும், 2015ம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தி, 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமேசான் காடுகளில் 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். ஏறத்தாழ இரண்டு நாள்களுக்கு ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக WWF எனும், உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும், பிரேசில் நாட்டின் `Mamirauá நீடித்த நிலைத்த வளர்ச்சி அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மனித நடவடிக்கைகளால் ஆபத்தில் உள்ள பகுதிகளிலேயே புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விலங்குகள் மற்றும், தாவரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 1999ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில், இக்காடுகளில், இரண்டாயிரத்திற்கும் அதிகமான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள், இன்னும் நூற்றுக்கணக்கான உயிரினங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். ஆயினும், வேளாண்மை மற்றும், மரம் வெட்டுதல் போன்ற மனிதச் செயல்பாடுகள், அமேசான் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு, ஆபத்தாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தனித்துவமான சிவப்பு வால்களைக் கொண்டுள்ள குரங்குகளுக்கு, "Firetail" என பெயரிடப்பட்டுள்ளது (நன்றி: கூகுள், பிபிசி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2019, 14:11