தேடுதல்

Vatican News
யூனிசெஃப் உதவி பெறும் சிறார்  யூனிசெஃப் உதவி பெறும் சிறார்  

குழந்தைகளின் உணவு பற்றாக்குறை - யூனிசெஃப் அறிக்கை

நமது வருங்காலமான குழந்தைகளை நலமுள்ளவர்களாக வளர்ப்பதில், அரசுகள், தனியார் மற்றும் பொதுநல அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து உழைக்கவேண்டும் என்று யூனிசெஃப் அறிக்கை விண்ணப்பித்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் வாழும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், மூன்றில் ஒருவர், உணவு பற்றாக்குறையால், முழுமையான வளர்ச்சியின்றி துன்புறுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் அவையின், குழந்தை நல அமைப்பான யூனிசெஃப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 16 இப்புதனன்று உலக உணவு நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, யூனிசெஃப் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, கடந்த 20 ஆண்டுகளில் வெளியாகியுள்ள மிகத் துல்லியமான அறிக்கை என்று கூறப்படுகிறது.

உலகெங்கும் வாழும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 20 கோடிக்கும் அதிகமானோர், தகுந்த உணவின்றியோ அல்லது, வயதுக்கு மீறிய எடையுடனோ உள்ளனர் என்றும், ஆறு மாதங்கள் முதல், இரண்டு ஆண்டுகள் வரை உள்ள குழந்தைகளுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உணவு குறைபாட்டுடன் வளரும் குழந்தைகள், நலவாழ்வு, அறிவுத்திறன், நோய் தடுப்பு சக்தி என்ற பல வழிகளில் பாதிப்படைகின்றனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைப்பருவத்திலேயே இறக்கின்றனர் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்ததும் முதல் 1000 நாள்கள் வழங்கப்படும் உணவும் அதன் அளவும், அக்குழந்தையின் வளர்ச்சியை பெருமளவு தீர்மானிக்கும் என்று கூறும் இவ்வறிக்கை, பிறக்கும் குழந்தைகளில் 46 விழுக்காட்டினருக்கு மட்டுமே தாய்ப்பால் சரியான முறையில் வழங்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

தகுதியான, சரியான உணவை குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து குடும்பங்களில் விழிப்புணர்வை உருவாக்குதல், குழந்தை உணவை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது தகுந்த கண்காணிப்பு ஆகிய ஒரு சில பரிந்துரைகளை யூனிசெஃப் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

நமது வருங்காலமான குழந்தைகளை நலமுள்ளவர்களாக வளர்ப்பதில், அரசுகள், தனியார் மற்றும் பொதுநல அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து உழைக்கவேண்டும் என்று யூனிசெஃப் அறிக்கை விண்ணப்பித்துள்ளது. (UN)

16 October 2019, 15:10