தேடுதல்

Vatican News
மகாத்மா காந்திஜி மகாத்மா காந்திஜி 

வாரம் ஓர் அலசல்: ஆயுதபலத்தைவிட அகிம்சை வழி வலிமையானது

பல கொள்கைகளுக்காக நான் உயிரை இழக்கத் தயார். ஆனால், எந்த ஓர் கொள்கைக்காகவும் அடுத்தவர் உயிரைப் பறிக்கமாட்டேன் - காந்திஜி

மேரி தெரேசா - வத்திக்கான்

"நீங்கள் செபித்துக்கொண்டிருந்தால், அவர்கள் உங்களை அடிப்பார்கள், நீங்கள் வாசித்துக்கொண்டிருந்தால், அவர்கள் உங்களை அடிப்பார்கள்". இவ்வாறு சொல்லியிருக்கும், 29 வயது நிரம்பிய ஈசா இப்ராஹிம் (Isa Ibrahim) அவர்கள், மேற்கு ஆப்ரிக்க நாடாகிய நைஜீரியாவின் கதுனா (Kaduna) நகர் இஸ்லாமியப் பள்ளியிலிருந்து காவல்துறையால் மீட்கப்பட்டவர். கதுனாவில், இஸ்லாமியப் பள்ளியாகவும், சீர்திருத்த இடமாகவும் பயன்படுத்தப்படும் இந்த மையத்தை, "சிதர்வதை இல்லம்" என அழைத்துள்ள காவல்துறை, இங்கிருந்து ஏறத்தாழ ஐந்நூறு ஆண்கள் மற்றும், சிறுவர்களை மீட்டுள்ளது. பல கைதிகள் சங்கிலிகளால் கட்டப்பட்டு மனித அடிமைமுறை இடம்பெறும் இடமாக இருக்கும் இப்பள்ளியை, “நரகநெருப்பு” போன்றது எனவும் காவல்துறை கூறியுள்ளது. இந்த பள்ளியில், சிலர், சித்ரவதைக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் உள்ளாகியுள்ளனர். நைஜீரியாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலா நிலையில் உள்ளனர். அப்படி அனுப்ப முடிந்தாலும், இத்தகைய இஸ்லாம் பள்ளிகளுக்கே அவர்களால் அனுப்ப முடிகின்றது. இந்த பள்ளியில் சித்ரவதைக்கு உள்ளாகி மீட்கப்பட்டுள்ள ஈசா இப்ராஹிமின் நடத்தையை திருத்துவதற்காக, இரு வாரங்களுக்குமுன் அப்பள்ளிக்கு அவரது குடும்பத்தினரால் அனுப்பப்பட்டார் அவர். இப்ராஹிம், தனது கதையை பிபிசி ஆங்கில ஊடகத்திடம் இவ்வாறு விளக்கியுள்ளார்.

“என்னை காவல்துறை மீட்க வருவதற்கு முந்திய நாள், அந்த பள்ளியிலிருந்து தப்பித்துச் செல்ல முயன்றேன். அதற்காக, நான், ஒரு பழைய மின்பொறி இயந்திரத்தோடு சங்கிலிகளால் கட்டப்பட்டு, "Tarkila" எனப்படும் கொடூரமான தண்டனைக்கு உட்பட்டேன். எனது கைகள் கட்டப்பட்டு, நான் மேல்தள உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டேன். அச்சமயத்தில் நான் தூங்கினாலும், அவர்கள் தடிகொண்டு தட்டி எழுப்பினர். அதனால் ஏறத்தாழ எனது உடல் முழுவதும் காயங்களாக உள்ளன. பசியால் வாடினேன். வெறும் சோறு மட்டும் கொடுத்தார்கள். இந்த மையத்தில் வைக்கப்படுபவர்கள் எல்லாரும் சக்தியனைத்தையும் இழந்து விடுகின்றனர்”.  சிறை போன்ற அமைப்பை உடைய இந்த பள்ளியிலிருந்து ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் உட்பட, பல வயதுடையவர்கள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. நடத்தைகளைத் திருத்துதல் என்ற பெயரில் சித்ரவதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்காலத்தில் சிறைகளில், குடும்பங்களில், வேறுபல இடங்களில், பலநேரங்களில், மனிதர், மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து, ஆட்சியைக் கைப்பற்றும் கட்சிகள், மக்களாட்சி தத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் உலகின் நடப்புகளை அலசினால், நல்ல செய்திகளைவிட, நெஞ்சைப் பிழியும் செய்திகளே அதிகம் கிடைக்கின்றன. இத்தகைய ஓர் உலகை, குறிப்பாக, இன்றைய இந்தியாவை மகாத்மா காந்தி அவர்கள் பார்வையிட வந்தால், அதிலும், அவர் இந்த மண்ணில் மகனாகப் பிறந்து 150 ஆண்டுகள் ஆகியிருக்கும் இவ்வேளையில், பார்வையிட வந்தால் என்ன நினைப்பார்? 

காந்திஜியின் அகிம்சை

அன்று, காந்திஜி அவர்கள், ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இந்தியர்கள் இருப்பதைக் கண்டு மனம் நொறுங்கினார். எனவே, உலகிலேயே அதுவரை யாரும் எடுக்காத அகிம்சை என்கிற புதிய ஆயுதத்தை கையில் எடுத்தார். அச்சமயத்தில் காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலிருந்தும்கூட பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும் கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாய் இருந்தார் அவர். சத்தியத்தின் மீது நம்பிக்கை வைத்து, கத்தியின்றி இரத்தமின்றி போர் நடத்தினார். இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள், அகிம்சை வழியிலேயே சென்று, வெற்றி பெற்றுக் காட்டினர். எனவே, ஐ.நா.வில் இந்தியா முன்மொழிந்த பரிந்துரையால், 2007ம் ஆண்டு, ஜூன் மாதம் 15ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, அக்டோபர் 2ம் தேதி உலக வன்முறையற்ற நாளாக கடைப்பிடிக்கப்படுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நாள், உலக அளவில் சிறப்பிக்கப்படுவதோடு, பாடத்திட்டங்கள் மற்றும், விழிப்புணர்வுத் திட்டங்கள் வழியாகவும் கடைப்பிடிக்கப்படுமாறும் ஐ.நா. பரிந்துரைத்தது.

உலக வன்முறையற்ற நாள்

அக்டோபர் 2, உலக வன்முறையற்ற நாள் 2019ம் ஆண்டு அக்டோபர் 2, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்டும் உலக வன்முறையற்ற நாளில், காந்திஜி அவர்கள் பிறந்த 150வது ஆண்டு நிறைவு நாளும் நினைவுகூரப்படுகின்றது. இந்நாளையொட்டி, இந்திய நடுவண் அரசு, நாடு முழுவதும், 600 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து கூறிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், மகாத்மா காந்தியின், 150வது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள், கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து, நாடு முழுவதும் நடக்கின்றன. இதையொட்டி, கடந்தாண்டு அக்டோபரிலிருந்து, இவ்வாண்டு ஏப்ரல் வரை, பல்வேறு மாநிலங்களில், 1,424 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக, அக்டோபர் 2, இச்செவ்வாயன்று, மேலும், 600 கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். சிறைகளில் உள்ள, 55 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகள், 60 வயதைக் கடந்த ஆண் கைதிகள், 55 வயதைக் கடந்த திருநங்கையர் ஆகியோர், தண்டனை காலத்தை, 50 விழுக்காடு அனுபவித்து இருந்தால், அவர்கள் விடுவிக்கப்படுவர். இதேபோல், மாற்றுத் திறனாளி கைதிகளுக்கும், இந்த சலுகை கணக்கில் எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால், இது மட்டும் போதுமா? மேலும், காந்திஜி பிறந்த நினைவு நாளில் மட்டும், அவரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணங்கினாலோ, அல்லது, அவரின் சமாதிக்குச் சென்று மலர்தூவி கைகுவித்து மௌன அஞ்சலி செலுத்தி ஊடகங்களில் தடித்த எழுத்துக்களில் இடம்பெற்றாலோ மட்டும் போதுமா? அரசுகளின், சமுதாயங்களின், குடும்பங்களின், தனிமனிதரின் வாழ்வில் அவரின் போதனைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டாமா? உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் அவர்கள், காந்திஜி பற்றிச் சொன்னபோது, “நமக்குப்பின் வரும் தலைமுறைகள் தசையோடும், இரத்தத்தோடும் இது போன்ற ஒரு மனிதர் பூவுலகில் உலவினார் என்பதைக்கூட நம்பமாட்டார்கள்” என்று சொன்ன ஒருநிலையைத்தான் இன்று பரவலாக காண முடிகின்றது. 

வன்முறை தொடர்கிறது

மதவெறிக்கு இரையான காந்திஜி, தனது இறப்பின் மூலம், அப்போது தீவிரவாதத்துக்கு முடிவு கட்டினார். ஆனால், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பயங்கரவாதம் என்ற பெயரில் வன்முறைகள் தாண்டவமாடுவதும், இரத்த வெள்ளம் பாய்ந்தோடுவதும் அதிமாகிக் கொண்டிருக்கின்றன. அகிம்சை வழி நாடு என்று இந்தியா இன்று பெருமையடைய முடியாது. மாட்டுக்காக மனிதர் துடிக்க துடிக்க அடித்துக்கொள்ளப்படும் கேவலமான நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. நீதிக்கு குரல்கொடுப்பவரின் குரல்வளைகள் நெறிக்கப்படுகின்றன, மற்றும் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. 1921ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை, மதுரை மேலமாசிவீதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார் காந்திஜி. மதுரைக்கு வருவதற்காக அவர் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது விவசாயிகள் அரைநிர்வாண உடை அணிந்திருப்பதை பார்த்தார். வறுமையில் வாடித்தவிக்கும் இந்த பாமர மக்களில் தானும் ஒருவன்தானே என்று நினைத்த காந்திஜி, அன்று முதல் தானும் அரை உடையை உடுத்த முடிவு செய்தார். செப்டம்பர் 22-ம் தேதி அவர் தங்கியிருந்த அறையைவிட்டு வெளியே வந்தபோது காந்தியைப் பார்த்து ஒரு கணம் வியப்படைந்தனர். அப்போது முதல் அந்த உடையில்தான் அவர் கடைசிவரை வாழ்ந்தார். அதே நாள் மாலை மதுரை-ராமநாதபுரம் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதன்முதலாக 'அரையாடை'யுடன் மேடையில் பேசினார் காந்திஜி. காந்திஜி என்றவுடன் இன்று நம்முன் தோன்றுவது அந்த மாபெரும் அடையாளமே. ஆனால் இன்று இந்தியாவில் விவசாயிகளின் நிலை என்ன

உண்மையும், அன்பும் மட்டுமே

“உலக வரலாற்றில் உண்மையும், அன்பும் மட்டுமே எப்போதும் வென்றுள்ளன. வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும்கூட வீழ்ந்தார்கள் என்பதை நான் நம்பிக்கையிழந்த நேரத்தில் எல்லாம் நினைத்துப் பார்த்துள்ளேன்” என்ற காந்திஜியின் வார்த்தைகளை எவரும் மறக்க முடியாது. காந்திஜியை எதிர்த்து, பாகிஸ்தானை விரும்பிய, முகமது அலி ஜின்னாவும் வன்முறையைத் தேர்ந்தெடுக்கவில்லை, தனது தொண்டர்களுக்கு போதிக்கவும் இல்லை. ஆனால் காந்திஜியை கொலைசெய்த மதவெறியர்கள், இன்றும் வன்முறையைத் தொடர்கின்றனர்.  காந்திஜி அவர்கள் பிறந்த 150வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் நாம், அவரின் சிறந்த பொன்மொழிகள், இக்காலச் சூழலுக்கு மிகவும் முக்கியம் என உணர்ந்தவர்களாய், அவற்றை ஆழமாகச் சிந்தித்து வாழ்வாக்க முயற்சிப்போம்.

காந்திஜியின் பொன்மொழிகள்

அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை; எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை"

"என் மதத்தின் அடித்தளம், உண்மையும், அகிம்சையும். உண்மை, என் கடவுள். அகிம்சை, அந்தக் கடவுளை அடையும் வழி."

"அகிம்சை என்பது, மனித குலத்திடம் உள்ள மாபெரும் சக்தி. அழிப்பதற்கென மனிதர்கள் கண்டுபிடித்துள்ள அத்தனை ஆயுதங்களையும்விட, அகிம்சை வலிமை மிக்கது."

"அகிம்சை என்பது, வேண்டும்போது அணிந்துகொண்டு, வேண்டாதபோது களைந்துவிடும் ஆடையைப்போன்றது அல்ல. அது, நம் உள்ளத்தில் உறைந்து, நம் உயிரின் அங்கமாகவேண்டும்."

"பல கொள்கைகளுக்காக நான் உயிரை இழக்கத் தயார். ஆனால், எந்த ஓர் கொள்கைக்காகவும் அடுத்தவர் உயிரைப் பறிக்கமாட்டேன்."

பழிக்குப்பழி என்பது நாளை உலகை சுடுகாடாக்கி விடும். மாற்றம் இவ்வுலகம் மாற வேண்டும் எனில், முதலில் நீ மாற வேண்டும்! உன்னை நீயே முழுமையாய் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனில், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உன்னை நீயே தோற்கடிக்க வேண்டும். உனது அனுமதி இன்றி, யாரும் உன்னை காயப்படுத்த முடியாது

30 September 2019, 15:28