தேடுதல்

Vatican News
ஐ.நா. உலக உச்சி மாநாட்டில் கிரேட்டா துன்பர்க் ஐ.நா. உலக உச்சி மாநாட்டில் கிரேட்டா துன்பர்க்   (AFP or licensors)

ஒருபோதும் உங்களை மன்னிக்க மாட்டோம்- கிரேட்டா

மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள், மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது, அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம், நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள் – உலகத் தலைவர்களிடம் கிரேட்டா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

“காலநிலை மாற்றத்தைத் தடுப்பது குறித்த ஐ.நா. உலக உச்சி மாநாட்டில், இத்திங்களன்று உரையாற்றிய, சூழலியல் ஆர்வலர் சிறுமி கிரேட்டா துன்பர்க் அவர்கள், நீங்கள் அனைவரும், பணம் மற்றும், நிரந்தரமான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்களது வெற்று வார்த்தைகளால், எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைத் திருடிவிட்டீர்கள் என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.  

வருங்காலத் தலைமுறையினர் அனைவரின் கண்களும் உங்கள் மீதே உள்ளன, நீங்கள் எம்மை ஏமாற்றிவிட்டால், நாங்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்க மாட்டோம் என்று, உலகத் தலைவர்களை நோக்கி, 16 வயது நிரம்பிய வளர்இளம் பருவச் சிறுமி கிரேட்டா அவர்கள் கூறினார்.

நாடுகள் மற்றும், அரசுகளின் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும், பொதுமக்கள் சமுதாயத்தின் மூத்த பிரதிநிதிகள் என, பல முக்கிய தலைவர்களை நோக்கி சரமாரி கேள்விக்கணைகளை வீசிய கிரேட்டா அவர்கள், நான் இங்கே இருந்திருக்கக் கூடாது, இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்,

ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? என்று கேட்டார்.

மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள், மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது, அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம், நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள், உங்களது துரோகத்தை இளையோர் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்றும் கிரேட்டா கூறினார்.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்காமல், நீங்கள் எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால், நான் இப்போது சொல்கிறேன், நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம் என்றும், உலகத் தலைவர்களிடம் கூறினார், சுவீடன் நாட்டுச் சிறுமி கிரேட்டா. (UN)

24 September 2019, 14:58