தேடுதல்

Vatican News
அணுப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடம் அணுப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடம் 

அணுப் பரிசோதனைகள், பூமிக்கு பெரும் அழிவுகளைக் கொணரும்

சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், அணுப் பரிசோதனைகள் தடை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், செப்டம்பர் 9, இத்திங்களன்று நடைபெற்ற, ஐ.நா. பொது அவையின் உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் ஏறத்தாழ இரண்டாயிரம் அணுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், அணுப் பரிசோதனைகள் தடை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அமல்படுத்தாதவரை இந்த ஒப்பந்தம் உலக அளவில் நடைமுறைக்கு வராது என்றும், கூட்டேரெஸ் அவர்கள் கூறினார்.

மேலும், அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான உலக நாளை முன்னிட்டு, ஐ.நா. நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, அணுப் பரிசோதனைகள் தடை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (CTBT) செயலர் Lassina Zerbo அவர்கள், அணுப் பரிசோதனைகள், மக்களுக்கும், இப்பூமிக்கோளத்திற்கும் கொணரும் பெரும் அழிவுகள் குறித்து எச்சரித்தார்.

இந்த உலகை அணு ஆயுதமற்ற இடமாக மாற்றுவதற்குரிய நம் இலக்கை எட்டுவதற்குத் தெளிவான நடவடிக்கைகள் எடுக்க, இந்த நாள், நாடுகளைத் தூண்டும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தம், உலகளாவிய ஒப்பந்தமாக, அனைத்து நாடுகளும் நடைமுறைப்படுத்துவதே, நம் இலக்கை அடைவதற்கு ஒரே வழி என்றும், Zerbo அவர்கள் தெரிவித்தார். அணு ஆயுதப் பரவல் மற்றும், அணுப் பயங்கரவாதம், உலகளாவிய சமுதாயத்திற்குத் தொடர்ந்து மாபெரும் சவால்களாகவே உள்ளன எனவும் உரைத்த அவர், அணுப் பரிசோதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்தார். (UN)

10 September 2019, 15:00