தேடுதல்

மப்புத்தோ நகர் மரியன்னை பேராலயம் அருகே மொசாம்பிக்கின் முதல் அரசுத்தலைவர் Samora Machelன் உருவச் சிலை மப்புத்தோ நகர் மரியன்னை பேராலயம் அருகே மொசாம்பிக்கின் முதல் அரசுத்தலைவர் Samora Machelன் உருவச் சிலை 

மப்புத்தோ நகரின் சிறு வரலாறு

போர்த்துக்கீசியரின் காலனி ஆதிக்கத்தில் 1850ம் ஆண்டில் படிப்படியாக வளரத் தொடங்கிய மப்புத்தோ நகரம், 1877ம் ஆண்டில் நகரம் என்ற நிலையை எட்டியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோ நகர்ப் பகுதி, 1500களில் ஒரு சிறிய மீனவக் கிராமமாக இருந்தது. 1544ம் ஆண்டில் போர்த்துக்கீசிய கப்பல் மாலுமி Lourenço Marques என்பவர் இப்பகுதியை முதலில் கண்டுபிடித்தார். எனவே 1975ம் ஆண்டு வரை, இந்நகருக்கு, அந்த மாலுமியின் பெயரே சூட்டப்பட்டிருந்தது. 1781ம் ஆண்டில், போர்த்துக்கீசியர்கள், இப்பகுதியில் துறைமுகத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து தற்போதைய நவீன மப்புத்தோ நகர் உருவாகுவதற்கு காரணமாகியது. 1850ம் ஆண்டில் வளரத் தொடங்கிய இந்நகரம், 1877ம் ஆண்டில் நகரம் என்ற நிலையை எட்டியது. மொசாம்பிக்கில் 400 ஆண்டுகளுக்கு மேலாக, காலனி ஆதிக்கத்தைக் கொண்டிருந்த போர்த்துக்கீசியர்கள், 1975ம் ஆண்டில் தங்களின் ஆட்சியை முடித்துக் கொண்டதன் விளைவாக, அந்நாடும் விடுதலையடைந்தது. அதுவரை Lourenço Marques என்ற பெயராலே அழைக்கப்பட்ட மப்புத்தோ நகரம், விடுதலைக்குப் பின்னர், தலைநகராகவும் மாறியது. மக்கள் பெருக்கம் மிகுந்த மப்புத்தோ நகரம், மொசாம்பிக்கின் தென்முனையில் அமைந்துள்ள துறைமுக நகரமுமாகும். இந்திய பெருங்கடலில், நீளமான இயற்கையாக அமைந்த விரிகுடாவில், Tembe, Mbuluzi, Matola ஆகிய நதிகள் ஒன்றுசேரும் இடத்தில் இந்நகர் உள்ளது. இந்நகரில், Bantu, மற்றும், போர்த்துக்கீசியம், அராபியம், சீனம் மற்றும் இந்திய மொழிகள், பேசுவோரையும், அவர்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களையும் காண முடியும். இந்நகரில் நிறைந்துள்ள jacaranda மற்றும், கருவேல மரங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன. இதனால் மப்பத்தோ நகருக்கு, கருவேல நகர் என்ற புனைப்பெயரும் உள்ளது. இந்நகரில் அமைந்துள்ள அழகிய வெண்மணல் கடற்கரையை வைத்து, இந்நகர் இந்தியப் பெருங்கடலின் முத்து எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2019, 16:18