தேடுதல்

Vatican News
குளத்தை சுத்தம் செய்த சிவக்குமார் குடும்பம் குளத்தை சுத்தம் செய்த சிவக்குமார் குடும்பம் 

பூமியில் புதுமை: மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

கோபத்தில் பேசாமல் இருந்த மகளைப் பேச வைப்பதற்காக, மகளின் விருப்பத்தின்படி, உள்ளூர் குளத்தை, தந்தை ஒருவர் சுத்தம் செய்துள்ளார். அவருடன் சேர்ந்து அக்குடும்பமே அப்பணியில் ஈடுபட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும், ஏழாம் வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும் உள்ளனர். இருவரும் மருதவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் சிவக்குமார் வீடு இடிந்தது. அதன் பிறகு சிவக்குமாருக்குச் சரிவர வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சிவக்குமார், தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனைப் பார்த்த சிறுமி நதியா, மிகுந்த மனவேதனையடைந்து, தனது தந்தையிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள். கோபத்தில் இருக்கும் மகள் கோபம் தணிந்து தன்னிடம் எப்படியும் பேசுவாள் என்று சிவக்குமார் முதலில் நினைத்தார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல, கடந்த எட்டு மாதத்திற்குமேல் நதியா தனது தந்தையிடம் பேசவே இல்லை. தனது அன்பு மகள் தன்னிடம் பேசாததை நினைத்து மிகவும் மனம் வருந்திய சிவக்குமார், மகள் நதியாவிடம், ஏம்மா... என்னிடம் பேச மறுக்கிறாய். 'நீ என்னிடம் பேச வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டுள்ளார். அதற்குச் சிறுமி நதியா, 'இனிமேல் அம்மாவிடம் சண்டை போடக் கூடாது. மேலும் நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. அந்த குப்பைகளை அகற்றி, குளத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்'. அப்போதுதான் நான் உங்களிடம் பேசுவேன்' என்று கூறியுள்ளார். தனது மகளைப் பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து கருங்குளத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்திலிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார். இப்பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி நதியாவும் ஈடுபட்டுள்ளார்.

26 September 2019, 14:12