தேடுதல்

Vatican News
மரம் நடுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது மரம் நடுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது  (AFP or licensors)

பூமியில் புதுமை – பேராசிரியரின் வேம்பு சாகுபடி வேட்கை

புவி வெப்பமயமாதலைத் தடுத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பறவைகளின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காக்கவும் வேப்பமரக் குறுங்காட்டை உருவாக்கிய ஒரு முற்போக்கு சிந்தனையாளர்

விக்டர் தாஸ் – வத்திக்கான்

திரு. கருப்பையா, இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் நார்த்தாமலைக்கு அருகில் அமைந்துள்ள தக்கிரிப்பட்டி இவரது சொந்த ஊர்.  புவி வெப்பமயமாதலைத் தடுத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பறவைகளின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காக்கவும் வேப்பமரக் குறுங்காட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல்லி முனைப்போடு செயல்படும் இவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர்.

ஆங்காங்கே வேலிக்கருவை, தைல மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும், விவசாய நிலங்கள் வறண்டுபோய்த் தரிசாகக் கிடக்கின்ற, இவர் வாழ்கின்ற பகுதியில் திரு கருப்பையாவின் வேப்பமரக் குறுங்காட்டை உருவாக்கும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

நான் நாட்டு வேம்புச் சாகுபடி செய்யப்போகிறேன் என்று சொன்னதும், எங்கள் ஊர் மக்கள், கேலி செய்து சிரித்தார்கள். ‘இதைப்போய் தனிப்பயிராக யாராவது சாகுபடி செய்வார்களா’ என்று கேலி செய்தார்கள். ஆனால், நான் அதைப்பற்றியெல்லாம் கவலைபடவில்லை. என்னுடைய முடிவில் நான் தீர்க்கமாக இருந்தேன் என்று இயற்கையின் மீதும் சுற்றுசூழல் மீதும் தான் கொண்ட தீராத ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்.

“கஜா புயலில் இலட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துபோயின. அதனால், பறவைகளுடைய  வாழ்விடங்கள்  அழிந்துவிட்டன, இங்கே பறவைகள் வாழ்வதற்கான சூழலே  இப்பொழுது  இல்லை. எனவே, என்னுடைய வேப்பந்தோப்பு குறுங்காடாக மாறி, பறவைகள் இங்கே வந்து கூடுகட்டி வாழவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் தமிழ் பேராசிரியர் கருப்பையா.

காற்றின் ஈரப்பதத்தையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி,  நிலத்தடி நீர்மட்டம் குறைய செய்யும் தைல மரங்களைப் பயிர் செய்து பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், திரு கருப்பையா போன்று எதிர்கால சந்ததியினரையும் சுற்றுசூழலையும் கருத்தில் கொண்டு செயல்படும்  ஒரு சில நல்ல நெஞ்சங்கள் இருப்பது நமக்கு பெருமையளிக்கிறது. (நன்றி: பசுமை விகடன்)

24 September 2019, 14:42