தேடுதல்

பச்சை கம்பளம் விரித்த நிலம் பச்சை கம்பளம் விரித்த நிலம் 

பூமியில் புதுமை : வேதிய உரங்களையே காணாத மண்

தான் உற்பத்தி செய்யும் அனைத்தையும் நேரடியாகவே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கூறி செயல்படுத்தி வரும் இயற்கை விவசாயி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, ஒருங்கிணைந்த இயற்கை விவசாயி வீராச்சாமியின் தோட்டம். கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற அவர், தான் பணியில் சேர்வதற்கு முன்னரே நிலம் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளார். 19 வருடங்களாக வேதிய உரங்கள் இந்த மண்ணிற்கு வந்ததில்லை என்று கூறும் அவர், தன் நிலத்திற்குத் தேவையான அங்கக இடுபொருட்களை தன் பண்ணையிலேயே உற்பத்தி செய்து கொள்கிறார். மாந்தோப்பு, நாட்டுகோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வாழை மரங்கள், மீன் குட்டைகள் என்று, நான்கரை ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கிறது, அவரது ஒருங்கிணைந்த பண்ணை. பஞ்சகவ்யா, மண்புழு உரம், பூச்சி விரட்டிகள், அசோலா, பயிர் வளர்ச்சி ஊக்கிகள், கோழிக்குத் தேவையான மருந்துகள் ஆகியவற்றை தனக்கு மட்டும் தன் தோட்டத்தில் தயாரித்து கொள்ளாமல் தன்னிடம் அவற்றை கேட்டு வருபவர்களுக்கும் கொடுக்கிறார்.

தன் மீன் குட்டையில் ஏழு வகையான மீன்களை வளர்க்கிறார். ஒரு மீன்குஞ்சினை இரண்டு ரூபாய்க்கு வாங்கும் அவர் சரியான எடை வந்தவுடன் கிலோ 160 ரூபாய் வரை விற்பனை செய்கிறார். தேனீ வளர்ப்பு மூலம் மாதத்திற்கு ஒருமுறை ஒரு தேனீ பெட்டியில் இருந்து இரண்டு கிலோ வரை தேன் எடுக்கிறார். தன் குடும்பத்துடன் சேர்ந்து முழு நேரப் பணியாக தன் பண்ணையை பராமரித்துவரும் இயற்கை விவசாயி வீராச்சாமி அவர்கள், தான் உற்பத்தி செய்யும் அனைத்தையும் நேரடியாகவே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கூறி செயல்படுத்தி வருகிறார். (நன்றி-vivasayam.org)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2019, 15:31