தேடுதல்

Vatican News
இயற்கை முறையில் சோயா பயிரிடுதல் இயற்கை முறையில் சோயா பயிரிடுதல் 

பூமியில் புதுமை : "ஒரு வெற்றி பண்ணை"

மொத்தம் 12.5 ஏக்கர் பரப்பளவில், 2006ல் உழவுப் பணிகளைத் துவக்கி, இன்று அதனை பூலோக சொர்க்கமாக்கியுள்ள ‘பேராற்றல் பண்ணை’.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

விவசாயம் என்றால், “ஒன்னு பேஞ்சு கெடுக்கும், இல்லன்னா காஞ்சு கெடுக்கும்” என்பார்கள். இந்தச் சூழ்நிலையில், காவிரி தண்ணீர் வேண்டாம் என்று, மழை நீரை முழுமையாகச் சேகரித்து, நிலைத்த உழவாண்மையை வெற்றிகரமாகச் செய்துவரும் பண்ணைக்குச் சொந்தக்காரர்கள், ரேவதியும் அவரது கணவர் திருவேங்கிடசாமியும். நாகபட்டினத்திலிருந்து திருவாரூர் சாலையில் 12வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, ஆளியூர். அங்கிருந்து கடம்பரவாழ்க்கை சாலையில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ‘பேராற்றல் பண்ணை’. மொத்தம் 12.5 ஏக்கர் பரப்பளவில், 2006ல் உழவுப் பணிகளைத் துவக்கி,  இன்று அதனை சொர்க்க பூமியாக்கியுள்ளனர்.

மொத்தம் மூன்று ஏக்கர் பரப்பளவில் 5 பெரிய பண்ணைக்குட்டைகள். இதில் சேமிக்கப்படும் மழைநீரின் அளவு 5 கோடி லிட்டர். ஜிலேபி, ரோக், கட்லா, கெண்டை என, 4 வகை மீன் வளர்ப்பில் அதிக வருமானம். காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, நாற்று வளர்ப்பு, சிறு தானியங்கள், அவரை, துவரை, பயறு வகைகள், தென்னை, மாதுளை, சப்போட்டா, நெல்லி, நாவல், கொய்யா பழவகைகள், எருமைகள், மாடுகள், என பெரும் சுழல் பண்ணையாக அது உருவெடுத்துள்ளது. படித்த இளையோர் இங்கு விவசாயத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 50,000 உழவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தோட்டம் சுற்றி உயிர்வேலியாக, 5000க்கும் மேல், நாட்டு மரங்கள் நட்டுள்ளனர். காவிரி நீரில் வேதியப்பொருள்கள் கலந்திருக்கும் என்பதால், அதை பண்ணைக்குள் விடாமல், சுற்றிலும் மழைநீர் சேமிக்க, புதிய கால்வாய்கள் தோண்டி உள்ளது சிறப்பு. 56 வகையான பறவையினங்கள் வந்து செல்கின்றன. கீச்.கீச் சத்தங்கள், பண்ணை முழுதும் எதிரொலிக்கின்றன. 30 வகை நெல்.. 20 வகை கத்தரி, தக்காளி என எல்லாம் நாட்டு இரகங்கள்.

திருவாரூர் நாகபட்டினம் உழவர்களுக்கு இப்பண்ணை ஒரு வரப்பிரசாதம். இதை மற்றவர்களும் கடைப்பிடித்தால் மாவட்டத்திற்கு 1 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். உள்ளூர் பொருளாதாரம் வளரும், நலன் பெருகும், தற்கொலைகள் தடைப்படும், வேலை தேடி ஊரைவிட்டு மக்கள் வெளியேறுவதும் நின்றுவிடும்.

18 September 2019, 16:20