தேடுதல்

Vatican News
ஏரிகள் சீரமைக்கப்படுகின்றன ஏரிகள் சீரமைக்கப்படுகின்றன 

பூமியில் புதுமை – மறுசீரமைப்பில் 109 குளங்கள்

தமிழகத்தில் அதிகளவில் கண்மாய்கள் உள்ள மாவட்டம் சிவகங்கை. தற்போது இம்மாவட்டத்தில் 109 குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகத்தில் அதிகளவில் கண்மாய்கள் உள்ள மாவட்டம் சிவகங்கை. இங்குள்ள நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் போன்றவற்றில் பல, ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், மழைநீர் குளங்களுக்கு வந்துசேராமல் இருந்தது. இந்த நிலையில், அம்மாவட்டத்தில், சில கிராமங்களில் உள்ளூர் மக்கள், மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை ஆற்றி வருகின்றனர். அம்மாவட்டத்தில், வேப்பங்குளம் கிராமம், வறட்சியை வென்ற கிராமம் என்ற பெயரை, ஏற்கனவே பெற்றிருக்கிறது. இதைக் கண்டு மகிழ்ந்து மக்களை ஊக்குவித்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள், ஊராட்சி அளவில் குழுக்களை அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்திருக்கிறார். அம்மாவட்ட விவசாய சங்கமும், ‘ஒரு பொக்லைன் இருந்தால், விவசாயிகளும் பொதுமக்களும் பராமரிப்புப் பணிகளைச் செய்ய உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டனர். இதனால், சிவகங்கை மாவட்டத்துக்குச் சொந்தமாக இருபது பொக்லைன் வாகனங்களை வாங்கியிருக்கிறார், ஜெயகாந்தன். நீர்நிலைகளைத் தூர்வாரவும், வாய்க்கால், வரத்துக்கால்வாய் போன்றவற்றைச் சரிசெய்யவும், விவசாயிகள் இந்த வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சொந்தமாக பொக்லைன் இயந்திரங்களை வாங்கியிருப்பது, தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ், வரத்துக் கால்வாய்கள், ஊருணிகள் போன்றவற்றை தூர்வாரி, கரைகளை உறுதியாக அமைக்கும் வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. மாவட்டத்தில் பல இடங்களில் ஊருணிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மட்க வைத்து உரமாக்கி வருகின்றனர். இப்பணிகள் எல்லாம், வரக்கூடிய மழைக்காலத்துக்குள் முடிந்துவிட்டால், ஊருணிகள் நிறைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடும் என்றும் மக்கள் நம்புகின்றனர். எதிர்காலத்தில் குடிநீர்ப் பிரச்சனையும், விவசாயத்துக்கான தண்ணீர்ப் பிரச்சனையும் இருக்காது. சிவகங்கை மாவட்டத்தில் 109 குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. (விகடன்)

03 September 2019, 15:34