தேடுதல்

Vatican News
விளாங்குடி ஓய்வுபெற்ற  நல்லாசிரியர் தியாகராஜன் விளாங்குடி ஓய்வுபெற்ற நல்லாசிரியர் தியாகராஜன்  

பூமியில் புதுமை – ஏரிகளை தூர்வாரும் தன்னார்வலர்

தமிழகத்தில் கடும் வறட்சி என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், மழைநீர்ச் சேகரிப்பு, குளங்களைச் சீரமைத்தல் போன்ற பணிகள் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

ஓய்வுபெற்ற ஆசிரியர் தியாகராஜன் அவர்கள், அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும் இவர், தான் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும், தொண்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன், அரசின் உதவியின்றி, ஐந்து ஏரிகளைத் தூர்வாரியிருக்கிறார். தியாகராஜன் அவர்கள் விகடன் செய்தியாளரிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் 110 நீர்நிலைகள் இருந்தன. அவற்றில் பலவும் தற்போது தூர்ந்துபோய், புதர் மண்டிக்கிடக்கின்றன. 2017-ம் ஆண்டில் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட எங்கள் கிராமத்தின் விளாங்குடி பெரிய ஏரியைத் தூர்வார முடிவுசெய்தேன். அதற்கான அனுமதி கேட்டுப் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோதும், அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. அப்போதைய ஆட்சியர் சரவணவேல்ராஜை அணுகி விவரத்தைச் சொன்னதும் அனுமதி கொடுத்தார். உடனே ஏரியைத் தூர்வாரினேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள என் மகள் ஆனந்தவல்லியின் பங்களிப்பு மற்றும், எனது சேமிப்புத்தொகையான மொத்தம் 2,50,000 ரூபாயை வைத்துதான் பணியைத் தொடங்கினேன். தொடர்ந்து என் மகள், அவரின் நண்பர்கள் வழங்கிய பத்து இலட்சம் ரூபாயை அனுப்பி வைத்தார். அடுத்து, அமெரிக்க எய்ம்ஸ் இந்தியா அறக்கட்டளை என்ற அமைப்பினர், திருவாரூரில் உள்ள ‘நாம்கோ தொண்டு நிறுவனம்’ வழியாக 1,80,500 ரூபாயை அனுப்பி வைத்தனர். ‘கோவை மக்கள் அறக்கட்டளை’ 2,30,000 ரூபாயை வழங்கியது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அடுத்தடுத்து நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டேன். இதுவரை 80.77 ஏக்கர் பரப்பளவில் ஏரிகள், கண்மாய்கள் உள்ளிட்ட ஐந்து நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தற்போது ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ள வடுகனேரியில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் ஏரிகளைச் சுற்றி, ஏறக்குறைய மூவாயிரம் பனை விதைகளை விதைத்துள்ளோம். அதோடு கிராமங்களில் உள்ள தெருக்களில் இரும்புக்கூண்டுகள் அமைத்து 150 மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்த்து வருகிறோம். நான் முயற்சி எடுத்தேன். பல அமைப்புகள் கைகொடுத்தன. அதனால்தான் இந்தச் சமுதாயநலப் பணியை என்னால் செய்ய முடிந்தது. (நன்றி–பசுமை விகடன்)

02 September 2019, 15:13