தேடுதல்

Vatican News
அமேசான் பருவமழைக் காடுகளில் தீ அமேசான் பருவமழைக் காடுகளில் தீ 

பூமியில் புதுமை:அமேசான் காட்டுத் தீ, சூழலியலுக்கு எச்சரிக்கை

காடுகள் தீப் பற்றியெரிவதால், புவி மேலும் வெப்பமடையும், கடல் மட்டம் உயரும் அதனால் பல கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கிப்போகும் ஆபத்து உள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான்

பிரேசில் நாட்டு அமேசான் பகுதி பருவமழைக் காடுகள் தீப் பிடித்து எரியும் நிகழ்வு, உலகளாவிய செய்தியாக மாறியுள்ளது. அத்தீயால் ஏற்படும் கரும்புகை மேகம், மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சா பவ்லோ நகர் வரைக்கும் சூழ்ந்துள்ளது. அமேசான் காடுகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவின் காடுகள், இந்தியக் காடுகள் என, உலகின் பிற பகுதிகளிலும் காடுகள் தீப் பற்றி எரிகின்றன. இந்தியாவில் 7 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு வனப்பகுதி உள்ளது. ஆனால் இவற்றில் 65 விழுக்காட்டு வனப்பகுதிகள் தீ விபத்துக்குள்ளாகும் ஆபத்தில் உள்ளன. இந்நாட்டில் காடுகளில் தீ ஏற்படுவது கடந்த சில ஆண்டுகளாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அண்மை காலத்தில் மட்டும் 28,252 தீ விபத்து நிகழ்வுகள், இந்திய காடுகளில் நிகழ்ந்துள்ளன. மேலும் கோடைக் காலங்களில் காடுகளில் தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறி வருகிறது. 2011-ம் ஆண்டில் இந்திய காடுகளில் நிகழ்ந்த தீ விபத்துகளின் எண்ணிக்கை 13,898. இதுவே கடந்த ஆண்டில் மட்டும் 37,059 ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறி வருகிறது. 3,75,000 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியில் இதுவரை 44,518 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகிவிட்டன. கங்கை, யமுனை நதிப்படுகையில் 80 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி சாம்பலாகிவிட்டது. இமாசலப் பிரதேசத்தில் 19 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு அழிந்துவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியும் தீ விபத்தில் முற்றிலுமாக கருகிப்போனது. அண்மையில் தமிழகத்தில் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து வெறும் செய்தியாகப் போனதோடு சரி. வன வளம் மிகவும் அவசியமானது. எனவே மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது. அவை நன்றாக வளர்ந்து செழிக்கின்றனவா என்பதில் கவனம் செலுத்த வேண்டும் (நன்றி - இந்து தமிழ் திசை). அமேசான் காட்டுத் தீ, உலக நாடுகளுக்கு தரப்பட்ட ஓர் அபாயச் சங்காகும்.

04 September 2019, 15:38