தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் கொசு ஒழிப்பு தாய்லாந்தில் கொசு ஒழிப்பு  (ANSA)

கொசு ஒழிப்பு உலக தினம், ஆகஸ்ட் 20

மனிதர்களில் மலேரியா நோய் பரவுவதற்கு காரணம், பெண் கொசுக்கள் என்று, பிரித்தானிய மருத்துவர், சர் ரொனால்டு ராஸ் அவர்கள், 1897ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கண்டுபிடித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கொசுக்களால், ஒவ்வோர் ஆண்டும் ஏழு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், தெற்கு ஆசியா மற்றும், ஆப்ரிக்காவில், கொசுக்களால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகம் என்றும், செய்திகள் கூறுகின்றன.

மனிதர்களில் மலேரியா நோய் பரவுவதற்கு காரணம், பெண் கொசுக்கள் என்று, பிரித்தானிய மருத்துவர், சர் ரொனால்டு ராஸ் அவர்கள், 1897ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கண்டுபிடித்ததை நினைவுகூரும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 20ம் நாளன்று, கொசு ஒழிப்பு உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொசு ஒழிப்பு உலக தினத்தை முன்னிட்டு, செய்திகளை வெளியிட்டுள்ள ஊடகங்கள், அண்மை ஆண்டுகளில், குறிப்பாக, 1995க்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மலேரியா நோயால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை வெகுவாய்க் குறைந்துள்ளது என்று கூறியுள்ளன.

இந்தக் காலக்கட்டத்தில், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் 30 கோடியிலிருந்து 21 கோடியாகவும், அதனால் உயிரிழந்தவர்கள், 30 இலட்சத்திலிருந்து 4 இலட்சத்து 20 ஆயிரமாகவும் குறைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 2015ம் ஆண்டில் கொசுக்களால் ஏற்பட்ட நோய்களால், ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் இறந்தனர், ஆயினும், இது குறித்த விழிப்புணர்வு, நலவாழ்வில் அக்கறை மற்றும், மருந்துகளால், இந்த இறப்புகள் குறைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.  

உலகில் ஏறத்தாழ 3,500 வகையான கொசுக்கள் உள்ளன. கொசுக்கள் வகைகள், இந்தியாவில், 400க்கும் அதிகம். ஒரு பெண் கொசு, தேங்கிய நீரில், ஒரு நேரத்தில், 100 முதல் 300 முட்டைகள் இடும். அது, 48 மணிநேரங்களுக்குள் அவற்றைப் பொறித்துவிடும்.

மருத்துவர் ரொனால்டு ராஸ் அவர்கள், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய இராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை இலண்டனில் முடித்து இந்தியா திரும்பினார். பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882ம் ஆண்டு முதல், 1899ம் ஆண்டு வரை ஈடுபட்டு, 1897ம் ஆண்டில் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார். இதற்காக, 1902ம் ஆண்டில் நொபெல் மருத்துவ விருதையும் அவர் பெற்றார். பிரிட்டன் சார்பில், நொபெல் விருது வென்ற முதல் நபர் இவர் ஆவார். (Agencies)

20 August 2019, 15:02