தேடுதல்

Vatican News
மெக்சிகோ பூர்வீக இன மக்களின் நடனக் கலையைக் காப்பாற்ற UNESCO முயற்சி மெக்சிகோ பூர்வீக இன மக்களின் நடனக் கலையைக் காப்பாற்ற UNESCO முயற்சி  (AFP or licensors)

பூர்வீக இன மக்கள் அறிவுள்ளவர்கள் என்பதை ஏற்போம்

பூர்வீக இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சூழலியல் பாதுகாப்பு போன்ற உலக விவகாரங்களுக்கு அம்மக்கள் ஆற்றிவரும் சேவைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பூர்வீக இன மக்கள் அறிவுள்ளவர்கள், உலகின் உயிரினப் பல்வகைகள் மற்றும் சூழலியல் அமைப்புகளைப் பாதுகாத்து பேணி வருகின்றவர்கள் என்பதை ஏற்போம் என, பூர்வீக இனத்தவரின் உலக நாளாகிய ஆகஸ்ட் 9, இவ்வெள்ளியன்று அழைப்பு விடுத்துள்ளது ஐ.நா. நிறுவனம்.

இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் இயக்குனர் Audrey Azoulay அவர்கள், பூர்வீக இன மக்கள், உலகில் அமைதியைக் கட்டியெழுப்பவும், சமுதாயங்களின் வளர்ச்சிக்கும் அளப்பரிய நன்மைகளை ஆற்றி வருகின்றனர் என்பதை உலகினர் உணருமாறு இந்த உலக நாள் அழைப்பு விடுக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

பூர்வீக இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சூழலியல் பாதுகாப்பு போன்ற உலக விவகாரங்களுக்கு அம்மக்கள் ஆற்றிவரும் சேவைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி, 1982ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 9ம் தேதி,   பூர்வீக இனத்தவரின் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. (UN)

இதற்கிடையே, உலகின் வளர்ச்சித் திட்டங்களால் பூர்வீக இன சமுதாயங்கள் வெகுவாய்ப் பாதிக்கப்படுகின்றனர் என்று, இந்த உலக நாளாகிய இவ்வெள்ளியன்று, பிலிப்பீன்ஸ் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிக்கோ துத்தர்தே அவர்கள் 2016ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, குறைந்தது 59 பூர்வீக இன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறிய, மனித உரிமை ஆர்வலர் Kerlan Fanagel அவர்கள், இந்த மக்களின் அழுகுரல்களுக்கு அரசு செவிமடுக்குமாறு வலியுறுத்தினார்.

அந்நாட்டில் இடம்பெற்றுவரும் தீவிர வளர்ச்சித் திட்டங்களால், இம்மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் மற்றும், கொல்லப்படுகின்றனர் என்றும், Fanagel அவர்கள் அரசை குறை கூறினார். (UCAN)

09 August 2019, 15:38