தேடுதல்

Vatican News
காஷ்மீரில் பதட்டநிலை காஷ்மீரில் பதட்டநிலை  (AFP or licensors)

காஷ்மீரில் நிலவும் பதட்டநிலை குறித்து ஐ.நா. கவலை

ஐ.நா.வின் இராணுவ கண்காணிப்பு குழு, காஷ்மீரிலிருந்து இந்தியாவைப் பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லையில் அதிகரித்துவரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா.விடம் அறிவித்து வருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியளிக்கும் சட்டப் பிரிவுகளை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதட்டநிலை உருவாகியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் நிறுவனம்

காஷ்மீரில் நிலவும் பதட்டநிலை குறித்து, நியு யார்க்கில் பேசிய, ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் Stéphane Dujarric அவர்கள், காஷ்மீரின் இந்தியப் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து, ஐ.நா. நிறுவனம் அறிந்துள்ளது என்றும், அனைத்து தரப்பினரும் அத்துமீறாமல், கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுமாறும் விண்ணப்பித்துள்ளார்.   

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள, UNMOGIP என்ற ஐ.நா.வின் இராணுவ கண்காணிப்பு குழு, காஷ்மீரிலிருந்து இந்தியாவைப் பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லையில் அதிகரித்துவரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா.விடம் அறிவித்து வருகின்றது என்றும், Dujarric அவர்கள் கூறினார்.  

காஷ்மீருக்கு சிறப்பு தகுதியளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளைத் திரும்பப் பெறும்  தீர்மானமும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் சட்டவரைவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய, காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி அவர்கள், காஷ்மீர் பிரச்சனை ஐ.நா.விடம் உள்ள நிலையில், மத்திய அரசு அவசரப்படுவது ஏன்? என்றும், இது, 1948ம் ஆண்டு முதலே ஐ.நா.வால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும், சிம்லா ஒப்பந்தம் மற்றும், லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளோம், பிறகு காஷ்மீர் எப்படி உள்நாட்டு விவகாரமாகும் என்றும் பேசினார் எனச் சொல்லப்படுகின்றது (UN)

06 August 2019, 14:31