தேடுதல்

Vatican News
ஏமனில் போர்க்களம் செல்லும் வீரர் ஏமனில் போர்க்களம் செல்லும் வீரர்   (ANSA)

போர்களில் சிக்கியுள்ள சிறாரின் இன்னல்கள் களையப்பட...

சிறார்க்கெதிரான பாலியல் வன்செயல், பள்ளிகளும், மருத்துவமனைகளும் தாக்கப்படல், சிறார் கடத்தப்படல், சிறார்க்கு மனிதாபிமான உதவிகளைத் தடைசெய்தல்...போர்க் காலத்தில், சிறார்க்கெதிராக இடம்பெறும் கடும் உரிமை மீறல்கள்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 02, இவ்வெள்ளியன்று, ஐ.நா. பாதுகாப்பு அவையில், சிறார் மற்றும், ஆயுத மோதல்கள் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில், உலகில் போர்ப் பகுதிகளில் பாதிக்கப்படும் சிறாரின் நெருக்கடிநிலைகளை விவரித்தார், ஐ.நா. அதிகாரி ஒருவர்.

ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிறாரின் நிலை பற்றி அறிக்கை தயாரிக்கும், ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி Virginia Gamba அவர்கள் உரையாற்றுகையில், சிறாரின் உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 30 ஆண்டுகளும், போர்ப் பகுதிகளில் சிறார் பாதுகாக்கப்படுவது பற்றிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகளும், 2019ம் ஆண்டில் நிறைவுறுவதை நினைவுபடுத்தினார்.

படைப்பிரிவுக்கு சிறார் தெரிவுசெய்யப்பட்டு பயன்படுத்தப்படல், சிறார் கொலை செய்யப்படுவது அல்லது ஊனமாக்கப்படுவது, சிறார்க்கெதிரான பாலியல் வன்செயல், பள்ளிகளும், மருத்துவமனைகளும் தாக்கப்படல், சிறார் கடத்தப்படல், சிறார்க்கு மனிதாபிமான உதவிகளைத் தடைசெய்தல் ஆகியவை, போர்க் காலத்தில், சிறார்க்கெதிராக இடம்பெறும் கடும் உரிமை மீறல்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார், Gamba.

போர்ப் பகுதிகளில் சிறார் எதிர்கொள்ளும் உரிமை மீறல்களைத் தடைசெய்வதற்கு ஐ.நா. நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றபோதிலும், ஆண்டுக்கு ஆண்டு, நிலைமை மேம்பட்டு வருகின்றது என்பதை, கூற இயலாமல் உள்ளது என்பதையும், Gamba அவர்கள் குறிப்பிட்டார்.

2018ம் ஆண்டில், சிறார்க்கெதிரான 24 ஆயிரம் உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்று, ஐ.நா. பாதுகாப்பு அவையில் கூறப்பட்டது. (UN)

03 August 2019, 15:42