தேடுதல்

Vatican News
பங்களாதேஷிற்குள் புலம்பெயர்ந்துள்ள  Rohingya  இனத்தவர் பங்களாதேஷிற்குள் புலம்பெயர்ந்துள்ள Rohingya இனத்தவர்  (ANSA)

Rohingya புலம்பெயர்ந்தோர் உரிமைகள் மதிக்கப்பட

இரு ஆண்டுகளுக்குமுன், மியான்மாரைவிட்டு கட்டாயமாக வெளியேறிய, ஏறத்தாழ பத்து இலட்சம் Rohingya மக்கள், நீதி மற்றும், தங்களின் வருங்காலம் பற்றிச் சொல்வதற்கு காத்திருக்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மியான்மாரின் Rohingya இனத்தவர் மற்றும், Rakhine மாநிலத்திற்குள் புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் முழுமையாய் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று, அம்மக்கள் மத்தியில் பணியாற்றும் 61 அரசு சாரா அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

மியான்மார் மற்றும், பங்களாதேஷ் நாடுகளில், இம்மக்கள் மத்தியில் பணியாற்றும்,  கிறிஸ்தவ உதவி நிறுவனம், கத்தோலிக்க இடர்துடைப்பு அமைப்பு உள்ளிட்ட, உள்ளூர், தேசிய மற்றும் பன்னாட்டு அரசு-சாரா அமைப்புகள் என, 61 அமைப்புகள், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளன.

Rohingya புலம்பெயர்ந்தோர், மியான்மாருக்குத் திரும்பிச் செல்வது உட்பட, தங்களின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய தீர்மானங்களை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் இந்த அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

இம்மக்கள், பங்களாதேஷில், புலம்பெயர்ந்தவர்களாக, தங்களின் பாதுகாப்பு மற்றும், மாண்பிற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்றும் கூறியுள்ள இந்த அமைப்புகள், இவர்கள், சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும் என்று, இவ்விரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளன.

3,450 Rohingya புலம்பெயர்ந்தோர், மியான்மாரில் மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என்ற செய்திகள் இவ்வாரத்தில் வெளியானதையொட்டி இவ்வாறு கூறியுள்ள இந்த அமைப்புகள், அம்மக்களை, மியான்மாருக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், அவர்களின் சுயவிருப்பமும், மாண்பும் மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. (ICN)

22 August 2019, 15:12