தேடுதல்

Vatican News
பாகிஸ்தான் சிறுபான்மை சமுதாயங்கள் நாள் நிகழ்வில் உரையாற்றுகிறார் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் சிறுபான்மை சமுதாயங்கள் நாள் நிகழ்வில் உரையாற்றுகிறார் பிரதமர் இம்ரான் கான் 

பாகிஸ்தான் பிரதமர்- சிறுபான்மை சமுதாயங்கள் பாதுகாக்கப்படும்

நாட்டின் அனைத்து சிறுபான்மை மதத்தவருக்கும், அவர்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும், நீதி ஆகியவற்றை வழங்க வேண்டியது, முஸ்லிம்களின் கடமை – பாகிஸ்தான் பிரதமர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில், சிறுபான்மை சமுதாயங்கள் பாதுகாக்கப்படும் என்று, பிரதமர் இம்ரான் கான் அவர்கள் உறுதியளித்திருப்பது நடைமுறைப்படுத்தப்படும் என்று, தான் நம்புவதாகவும், அதற்காக இறைவனிடம் மன்றாடுவதாகவும், அந்நாட்டு ஆயர் சாம்சன் சுக்கார்தின் அவர்கள் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசுத்தலைவர் இல்லத்தில், சிறப்பிக்கப்பட்ட ‘தேசிய சிறுபான்மை சமுதாயங்கள் நாள்’ நிகழ்வில் உரையாற்றிய, பிரதமர் இம்ரான் கான் அவர்கள், நாட்டின் அனைத்து சிறுபான்மை மதத்தவருக்குப் பாதுகாப்பு அளிப்பதும், அவர்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும், நீதி ஆகியவற்றை வழங்க வேண்டியதும், முஸ்லிம்களின் கடமை என்பதை வலியுறுத்தினார்.

1,400 ஆண்டுகளுக்குமுன், இறைவாக்கினர் முகமது அவர்கள், நாட்டில் வாழ்ந்த சிறுபான்மை சமுதாயங்களை எவ்வாறு நடத்தினார் என்பதை, அனைத்து முஸ்லிம்களும் நினைவில் இருத்த வேண்டும் என்றும், இம்ரான் கான் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

பிறரைக் கட்டாயமாக மதம் மாற்றுபவர்கள், இஸ்லாம் வரலாறு மற்றும் இஸ்லாம் மதம் பற்றி அறியாதவர்கள் என்றும், பிரதமர் கான் அவர்கள் கூறினார்.

இந்த உரை பற்றிய தன் கருத்துக்களை, பீதேஸ் செய்தியிடம் பகிர்ந்துகொண்ட, ஹைதராபாத் ஆயர் சுக்கார்தின் அவர்கள், பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களும், வழிபாட்டுத்தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.

ஆகஸ்ட் 11, ஞாயிறன்று, பாகிஸ்தானில், தேசிய சிறுபான்மை சமுதாயங்கள் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. (Fides)

03 August 2019, 15:33