தேடுதல்

Vatican News
பறவைகளின் சரணாலயம் மரங்கள் பறவைகளின் சரணாலயம் மரங்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : பறவைகளுக்கு வாழ்வு தந்த பேராசிரியர்

பறவைகள்தான், பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமானவை. ஆனால், அந்தப் பறவைகள் வாழ்வதற்குத் தேவையான வாழ்விடங்களே, இப்போது பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

பறவைகளுக்காக, வேப்ப மரங்கள் சூழ்ந்த குறுங்காடு ஒன்றை அமைத்துள்ளார், புதுக்கோட்டை, தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, பேராசிரியர் கருப்பையா. பறவைகள் தான், பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமானவை. ஆனால், அந்தப் பறவைகள் வாழ்வதற்குத் தேவையான வாழ்விடங்களே, இப்போது பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ள காரணத்தால், அங்கு விவசாயப் பயிர்களை விடவும், வனப்பகுதிகளின் பரப்பளவு அதிகமாக இருந்தது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, யூகலிப்டஸ் மற்றும் தைல மரங்கள், அம்மாவட்டத்தில் உள்ள வனங்களை எல்லாம் அழித்தன. குறுங்காடுகள் அழிந்துபோன காரணத்தால், பறவைகள், மான்கள் போன்ற உயிரினங்களும், படிப்படியாக மறைந்துபோயின. இச்சூழலில் தான், 2 ஏக்கர் நிலத்தில், வேப்பமரங்கள் நிறைந்த குறுங்காட்டை உருவாக்கத் திட்டமிட்டார் கருப்பையா. ஆறு ஆண்டுகளுக்கு முன், வேப்பமரங்களை நடவு செய்தார். இப்போது, அவர் வயலே, சிறிய வனம் போல மாறிவிட்டது. யூகலிப்டஸ் போன்ற மரங்களில், பறவைகளால் கூடுகட்ட முடியாது. அதனால், பல கி.மீ. தூரத்திலிருந்து பறவைகள் இங்கு வந்து, வேப்ப மரங்களில் கூடு கட்டுகின்றன. பல்லுயிர் சூழலுக்கும், புவி வெப்பமாதலைத் தடுப்பதற்கும், வேப்பமரங்கள் மிகவும் முக்கியம், என்கிறார், பேராசிரியர் கருப்பையா. (நன்றி : தினமலர்)

16 August 2019, 15:03